tamilnadu

img

டெல்டா- தென் மாவட்டங்களில் கனமழையால் பயிர்கள் நாசம்... ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்கிடுக... விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்க...

சென்னை:
டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால்  விவசாயப் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்துள்ளன. இதனால் ஏக்கருக்குரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளின்  கடன்களை முழுமையாக தள்ளுபடிசெய்யவேண்டும்  என்று தமிழகஅரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

கடந்த ஒரு வார காலமாக டெல்டா  மாவட்டங்களான நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை மற்றும் தென்மாவட்டங்களான இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடைவிடாமல் கொட்டித் தீர்க்கும் கனமழையினால் நெல்வயல்கள் உள்ளிட்ட பயிர்கள் மழைநீரில் மூழ்கிக் கிடக்கின்றன. அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்களும் தலைசாய்ந்து படுத்து நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கிவிட்டன. வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், அறுவடைஇயந்திரங்களைப் பயன்படுத்து வதற்கு சாத்தியமும் இல்லை. சற்று தாமதமாக நட்ட பயிர்களும் கூட தண்ணீரில் மூழ்கி முற்றிலுமாக அழுகியுள்ளன. இதனால் பல லட்சக் கணக்கான ஏக்கர் நெல் உள்ளிட்ட பயிர்கள் நாசமாகியுள்ளதால் பயிரிட்டுள்ள விவசாயிகள் சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர். 

அடிமாட்டு விலைக்கு விற்கும் அவலம் 
டெல்டா மாவட்டங்களில் எட்டு வருடங்களுக்கு பிறகு மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு, ஹெக்டேருக்கு 6.2 டன் என்று கூடுதல் விளைச்சல் கண்டதாக வேளாண்மைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், அரசு கொள்முதல் செய்யாமல் இழுத்தடித்த காரணத்தினாலும், மழையில் நனைந்து வீணானதாலும் போதிய விலையின்றி அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.கடந்த நவம்பர் மாதத்தில் கன மழை, நிவர் மற்றும் புரெவி புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. லட்சக்கணக் கான ஏக்கர் நெல்வயல்கள் மூழ்கி நாசமடைந்தன. அரசின் சார்பில் வழங்கப்பட்ட குறைந்தபட்ச நிவாரணமும் கூட எல்லா பகுதிகளிலும் சமமாக வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளில் சிலருக்கு இன்னமும் கூட நிவாரணம் சென்று சேரவில்லை. இந்நிலையில் மீண்டும் இடைவிடாத மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்துள் ளது விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

கண்ணீரில் விவசாயிகள்
நெற்பயிர்கள் மழைநீரில் நனைந்து மூழ்கிப்போயுள்ளதால் விவசாயிகளும், அவர்தம் குடும்பங்களும் மிகப் பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி கண்ணீரும், கம்பலையுமாக நிற்கின்றனர். பொங்கல் பண்டிகையை கூட கொண்டாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சேதமடைந்த பயிர்களை நேரில் பார்வையிட்டு, கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கிட தமிழக அரசோ, அதிகாரிகளோ இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூட சொல்லவில்லை என்பது வேதனையான விசயமாகும்.

எனவே, டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் தற்போதுபெய்து வரும் இடைவிடாத கனமழையினால் அழுகிப்போன நெல் உள்ளிட்ட  பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்கிட வேண்டும்.   இயற்கை இடர்பாடுகளால் அடுத்தடுத்து இழப்புகளை விவசாயிகள் சந்தித்து வருவதால் தமிழக அரசு, விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.