இந்தியாவின் “புலி மாநிலம்” என அழைக்கப்படும் மத்தியப் பிரதேசத்தில், புலி பாதுகாப்பு குறித்து கடும் கவலை எழுந்துள்ளது. 2025ஆம் ஆண்டில் இதுவரை மட்டும் 54 புலிகள் உயிரிழந்துள்ளன. 1973ல் ‘பிராஜெக்ட் டைகர்’ தொடங்கியதிலிருந்து ஒரே ஆண்டில் இவ்வளவு அதிக புலி மரணங்கள் பதிவானது இதுவே முதல் முறை.
2021 - 34, 2022இ - 43, 2023 - 45, 2024 - 46, மற்றும் 2025ஆம் ஆண்டு இன்னும் முடிவடையாத நிலையில் தற்போதுவரை 54 புலிகள் உயிரிழந்துள்ளன.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 6 புலிகள் மரணமடைந்துள்ளன. சமீபத்தில் பந்தவ்கர் புலி காப்பகத்தில் ஒரு புலி சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ தகவலின்படி, உயிரிழந்த புலிகளில் சுமார் 57 சதவீதம் ‘இயற்கைக்கு மாறான காரணங்களால்’(வேட்டையாடல், மின்சாரம் தாக்குதல்) உயிரிழந்துள்ளன.
வேட்டைக்காரர்கள் பாதுகாக்கப்பட்ட காடுகளுக்குள் நுழைந்து செயல்படுவதாகவும், கண்காணிப்பு அமைப்புகள் பலவீனமாக இருப்பதாகவும் வனவிலங்கு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கிடையில், சர்வதேச வனவிலங்கு கடத்தல் கும்பலின் முக்கிய நபர் சமீபத்தில் கைது செய்யப்பட்டிருப்பது, மேலும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
விமர்சனங்களுக்கு பதிலளித்து வனத்துறை சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில், “இதுவே இதுவரை இல்லாத அளவுக்கு அதிக புலி மரணங்கள் பதிவான ஆண்டு” என்பதே, உடனடி மற்றும் தீவிர நடவடிக்கை தேவை என்பதை உணர்த்துகிறது
