கொச்சி:
கோவிட் நோயால் மோசமாக பாதிக்கப்பட்ட வர்களை லட்சத்தீவில் இருந்து கேரளாவுக்கு விமானஆம்புலன்ஸில் கொண்டு செல்வதும் தடை செய்யப் பட்டுள்ளது.
ஒரு நோயாளி உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்று தீர்மானிக்கும் உரிமை தீவின் மருத்துவ அதிகாரிகளிடமிருந்து பறிக்கப்பட்டு சுகாதார சேவைகள் இயக்குநரின் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குழுவின் முடிவுக்கு லட்சத்தீவு நிர்வாகத்தின் ஒப்புதல் தேவைப்படும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்திற்கான மத்திய அரசின் நிர்வாகிபிரபுல் கே. படேலின் அறிவுறுத்தலின் பேரில் சுகாதாரசேவை இயக்குநரால் இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
மருத்துவ வசதிகள் பற்றாக்குறையாக இருக்கும்லட்சத்தீவில், மருத்துவ அதிகாரி முடிவு செய்தால் உடனடியாக நோயாளியை கேரளாவுக்கு அழைத்து வர முடியும். நோடல் அதிகாரி மூலம் நோயாளி ஹெலிகாப்டரில் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். இது தற்போது மிகவும் சிக்கலான நடைமுறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. புதிய உத்தரவின்படி, கேரளாவுக்கு மட்டுமல்லாமல், அருகிலுள்ள கவரட்டி மற்றும் அகட்டி தீவுகளில் உள்ள மருத்துவ மனைகளுக்கு மாற்றுவதற்கும் கூட நிர்வாகியின் ஒப்புதல் பெற வேண்டும்.மறுஆய்வுக் குழுவின் தலைவராக சுகாதார சேவை இயக்குநர், எம்.கே.சவுதாம்பி உள்ளார். கவரட்டிநகரில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனை டாக்டர் சி.ஜி. முகமது ஜலீல், தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் நோடல் அதிகாரி கே நவுஷிதா மற்றும் கவரட்டி மருத்துவமனையின் அந்தந்த நோய் நிபுணர் அடங்கிய குழுவால் இந்த பரிந்துரை செய்யப்படும். இருப்பினும், இறுதி முடிவு நிர்வாகியிடம் உள்ளது.குழுவைச் சந்திப்பதில் ஏற்படும் தாமதமும், நிர்வாகியின் உத்தரவைப் பெறுவதும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று லட்சத் தீவு மக்கள் கவலைப்படுகிறார்கள். லட்சத்தீவில் உள்ள ஓரளவேனும் வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் கவரட்டி மற்றும் அகட்டி ஆகிய இடங்களில் உள்ளன. லட்சத் தீவுகள் பிரதேசத்தின் மற்ற தீவுகளில் முதன்மை பராமரிப்பு வசதிகள் மட்டுமே உள்ளன. சிறிய தீவுகளில் ஸ்கேனிங் வசதிகள் கூட இல்லை.