காசாவில் நாளுக்கு நாள் பட்டினியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், நிவாரண பொருட்களை வழங்க சென்ற சமூக ஆர்வலர்களின் கப்பலை இஸ்ரேல் 2-ஆவது முறையாக இடைமறித்து 21 பேரை கைது செய்ததாக ஃபீரிடம் ஃபுளோடில்லா என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக, இதே அமைப்பு கடந்த ஜூன் மாதம் காசாவை நோக்கி நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் போது சமூக ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் உள்பட 12 பேரை இஸ்ரேல் கைது செய்த நிலையில், தற்போது சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் என 21 பேரை கைது செய்துள்ளது.
இதுகுறித்து ஃபிரிடம் புளோடில்லா(Freedom Flotilla) அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஹண்டாலா என்ற கப்பலில் காசாவை நோக்கி நிவாரண பொருட்களை வழங்கச் சென்ற 21 பேரை இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளது. காசாவுக்கு 40 மைல் தொலைவில் நியாயமற்ற முறையில் கப்பலை இடைமறித்ததோடு, அதில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் மற்றும் பிற தொடர்பு சாதனங்களை தகர்த்தெறிந்தது.
இந்தக் கப்பலில் ஆயுதங்கள் எதுவும் எடுத்துச் செல்லவில்லை. காசாவில் கடும் பட்டினியால் தவித்துவரும் மக்களுக்கு வழங்குவதற்காக உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் உள்பட நிவாரணப் பொருள்களே கொண்டு செல்லப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலால் சீர்குலைந்த காசாவில் கடும் பட்டினி காரணமாக பொதுமக்கள் உயிரிழப்பது அதிகரித்து வருவதற்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 59 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.