india

img

போராடும் விவசாயிகள் பற்றி மன்கி பாத்-தில் பேசாதது ஏன்? பிரதமருக்கு முன்னாள் அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் கேள்வி....

புதுதில்லி:
தில்லியில் போராடும் விவசாயிகளைப் பற்றி மன்கி பாத்-தில் பிரதமர் பேசாதது ஏன்? என்றும், அவர்களை ஒட்டுண்ணி என்று பிரதமர் விமர்சிப்பது சரிதானா? என்றும் ஹர்சிம்ரத் கவுர் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவரான ஹர்சிம்ரத் கவுர், சிரோமணி அகாலிதளம் கட்சியின் முக்கியத் தலைவராவார்.

அவர் நாடாளுமன்றத்தில் மேலும் பேசியிருப்பதாவது:

தில்லி எல்லைகளில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் மத்திய அரசோ கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் யாரும் ஏகே 47 ரக துப்பாக்கிகளுடன் தில்லியில் போராடவில்லை. ஆனால், அரசியல் சாசன நாளில் (குடியரசுத் தினத்தன்று) நிராயுதபாணிகளான விவசாயிகள் மீது லத்திகளைக் கொண்டு மத்திய அரசு தாக்கியது. கண்ணீர்புகைக் குண்டுகளையும் வீசியது. 

பிரதமர் மோடி, குஜராத்தின் முதல்வராக இருந்தபோது விவசாய விளைபொருட்களின் குறைந்தபட்ச விலையை உறுதி செய்ய வேண்டும் என்றார். இப்போது 360 டிகிரி தலைகீழ் மாற்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். அவரது மன்கி பாத் வானொலி நிகழ்ச்சியில் அல்லது குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து இதுவரை விவசாயிகள் போராட்டம் பற்றி ஒரு வார்த்தையும் வரவில்லை. மாறாக, விவசாயிகளை ஒட்டுண்ணிகள் என பிரதமர் மோடி அழைக்கிறார். ஆனால், அந்த விவசாயிகள்தான் பிரதமரின் மேஜைகளில் உணவுப் பொருட்களை கொண்டுவந்து வைக்கிறார்கள் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும். இந்த நாட்டில் யாரேனும் உண்மையைக் கூறினால், எழுதினால் அவர்களை சிறையில் அடைக்கின்ற கொடுமைதான் நடக்கிறது.இவ்வாறு ஹர்சிம்ரத் கவுர் பேசியுள்ளார்.