tamilnadu

img

மதிப்புமிக்க இளம் உயிர்களை தொடர்ச்சியாக பறிக்கும் சாதிவெறி கவின்குமார் சாதி ஆணவப் படுகொலை; தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்!

மதிப்புமிக்க இளம் உயிர்களை தொடர்ச்சியாக பறிக்கும் சாதிவெறி கவின்குமார் சாதி ஆணவப் படுகொலை; தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்!

திருநெல்வேலி, ஜூலை 28 - நெல்லையில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த இளைஞர் கவின் குமார், ஞாயிறன்று கொடூரமான முறையில் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்திற்கு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் - ஆசிரியை தமிழ்ச்செல்வி தம்பதியரின் மகன் பொறியாளர் கவின்குமார் (28). சென்னையில் ஐ.டி. துறையில் பணியாற்றி வருகிறார்.  திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சேர்ந்த காவல்துறையில் பணியாற்றும் சரவணன் – கிருஷ்ண குமாரி தம்பதியரின் மகள் மருத்துவர் சுபாசினி (சித்தா). கவின்குமாரும், சுபாசினியும் ஒருவரை ஒருவர் நேசிப்பதோடு, திரு மணம் செய்து கொள்ளவும் முடிவு செய்திருந்ததாக தெரிகிறது. சாதிய ஆதிக்க உணர்வின் காரணமாக, இதனை சகித்துக் கொள்ள முடியாத சுபாசினியின் தம்பி சுர்ஜித் 27.07.2025 அன்று கவினை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளார். ஐ.டி. துறையில் வருமானம் பெறுகிற பொறியாளராக இருந்தா லும், அவர் பட்டியல் சமூகத்தை  சேர்ந்தவர் என்கிற காரணத்திற்காக கவின்குமாரை தனது சகோதரி திரு மணம் செய்தால் தனது குடும்பத்தின் ‘சாதிப் புனிதம்’ கெட்டு விடும் என்கிற பிற்போக்குத்தனமான சிந்தனை தான் இப்படுகொலைக்கு காரணமாக இருக்கிறது.  மதிப்புமிக்க இளம் உயிர்கள், தொடர்ச்சியாக சாதி ஆணவப் படு கொலைக்கு பலியாவது தொடர் கிறது. இதனை வழக்கமான ஒரு செய்தியாக அரசும், சமூகமும் கடந்து செல்வதும் தொடர்கிறது. இப்படுகொலையை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. குற்ற வாளிகள் மீதான வழக்கை தகுதி யான அரசு சிறப்பு வழக்கறிஞரை நியமித்து விரைந்து நடத்தி சட்டப்படியான தண்டனையை உறுதி செய்திட வேண்டும்.  இக்கொடூரமான கொலை நடந்துள்ள பின்னணியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாதி  ஆணவப் படுகொலைகளைத் தடுத்திட தனிச் சட்டத்தை இயற்றிட வேண்டும் என்று மீண்டும் வலி யுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கை யில் குறிப்பிடப்பட்டு உள்ளது.