இரண்டுநாள் சுற்றுப்பயணமாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தில்லி வந்தடைந்தார்.
ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், தில்லி விமான நிலையத்துக்கு நேரில் சென்று அவரை வரவேற்ற நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து வாங் யி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை நாளை காலை 11 மணியளவில் சந்தித்து எல்லை விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார். அதைத் தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்திய –சீன விவகாரங்கள் தொடர்பான இருதரப்பு சிறப்பு பிரதிநிதிகளின் 23ஆவது சுற்று பேச்சுவார்த்தை சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது. இதில் அஜித் தோவல் பங்கேற்றிருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வாங் யி 24ஆவது சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளார்.