world

img

ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை “எங்கள் நிலைப்பாட்டில் ஒரு கமா கூட மாறாது” : ஸ்பெயின் பிரதமர் சான்செஸ் அதிரடி!

ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை “எங்கள் நிலைப்பாட்டில் ஒரு கமா கூட மாறாது” : ஸ்பெயின் பிரதமர் சான்செஸ் அதிரடி!

மாட்ரிட், மார்ச் 5- ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தி வரும் கொடூரமான தாக்குதல்கள் “பேரழி வானது” என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பகிரங்கமாகக் கண்டித்துள்ளார். தனது நாட்டு ராணுவத் தளங்களை இந்தத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ள அவர், அமெரிக்காவின் வணிக மிரட்டல்களு க்குத் தனது அரசு ஒருபோதும் பணியாது என அதிரடியாகத் தெரிவித்துள்ளார். ஸ்பெயினின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிலைப்பாடு ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் கூட்டு ராணுவ நடவடிக்கை தொடங்கிய நாளிலிருந்தே ஸ்பெயின் தெளிவான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது. ஸ்பெயினின் தென்பகுதியில் உள்ள மொரோன் டி லா பிரோன்டேரா (செவிய்யா) மற்றும் ரோட்டா (காடிஸ்) ஆகிய இரண்டு கூட்டு ராணுவத் தளங்களையும் ஈரான் மீதான தாக்கு தல்களுக்குப் பயன்படுத்துவதை ஸ்பெயின் அரசு முழுமையாக மறுத்துவிட்டது.

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பாரஸ், அரசுத் தொலைக்காட்சி யில் பேசுகையில், “இந்த ராணுவ நடவடிக்கை க்குத் தளங்கள் பயன்படுத்தப்படவில்லை; இனி பயன்படுத்தவும் மாட்டோம். அமெரிக்காவுட னான ஒப்பந்தம் சர்வதேசச் சட்டக்கட்டமைப்பி ற்கு உள்ளாகவே செயல்பட வேண்டும். ஐநா சாசனத்திற்குப் புறம்பாக எந்த ஒரு நடவடிக்கைக் கும் இந்தத் தளங்களைப் பயன்படுத்த அனு மதிக்க மாட்டோம்” என்று உறுதியுடன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, போர் விமானங்களு க்கு ஆகாயத்தில் எரிபொருள் நிரப்பும் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட அமெரிக்காவின் கேசி-135 (KC-135) டேங்கர் விமானங்கள், மொ ரோன் மற்றும் ரோட்டா தளங்களிலிருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

ஸ்பெயி னின் இந்தத் தீர்க்கமான மறுப்புதான் அமெ ரிக்காவை இந்த மாற்றத்திற்குத் தள்ளியது என்பதைப் பாதுகாப்பு அமைச்சர் மார்கரிட்டா ரோப்லஸ் உறுதிப்படுத்தியுள்ளார். சான்செஸின் நெஞ்சுரமிக்க தேசிய உரை புதன்கிழமை அன்று தேசிய தொலைக்காட்சி யில் நேரடியாக உரையாற்றிய பிரதமர் சான்செஸ், டொனால்டு டிரம்ப்பின் வணிக மிரட் டல்களுக்குச் சிறிதும் அஞ்சாமல் ஸ்பெயினின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். “ஸ்பெயின் அரசின் நிலைப்பாட்டை மூன்று வார்த்தைகளில் சுருக்கலாம்: ‘போருக்கு ஒப்பு தல் இல்லை’ (No to War). யாரோ ஒருவரின் பழிவாங்கும் மிரட்டலுக்குப் பயந்து, உலகிற்கே தீங்கு விளைவிக்கக்கூடிய, தங்களது மதிப்புகள் மற்றும் நலன்களுக்கு எதிரான ஒரு விஷயத்தில் ஸ்பெயின் ஒருபோதும் உடந்தையாக இருக் காது” என்று அவர் முழங்கினார். மேலும் பேசிய அவர், “அரசாங்கங்கள் மக்க ளின் வாழ்க்கையை மேம்படுத்தவே இருக்கின் றன - மோசமாக்க அல்ல.

போரின் புகையைச் சிலர் தங்கள் தோல்விகளை மறைக்கவும், தங்கள் பொக்கிஷங்களை நிரப்பவும் பயன் படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றார். வன்முறைதான் பதில் என்று நம்புவது தலை மைத்துவம் அல்ல, அது அறியாமை என்று சாடிய அவர், ஈரானின் ஒடுக்குமுறை ஆட்சியைத் தான் வெறுத்தாலும், சர்வதேசச் சட்டத்திற்குப் புறம்பான இந்த ஆபத்தான ராணுவத் தாக்கு தலை ஒருபோதும் ஆதரிக்க முடியாது என்று தெளிவுபடுத்தினார். டிரம்ப்பின் வணிக மிரட்டலும் ஸ்பெயினின் தீர்க்கமான பதிலும் ஸ்பெயினின் நிலைப்பாட்டால் ஆத்திரம டைந்த டொனால்டு டிரம்ப், “ஸ்பெயினுடனான அனைத்து வணிகங்களையும் இன்றே நிறுத்த முடியும். ஸ்பெயினுடன் எங்களுக்கு எந்தத் தொடர்பும் வேண்டாம்” என்று மிரட்டல் விடுத்தார்.

மேலும், “அந்தத் தளத்தை நாங்கள் விரும்பினால் பயன்படுத்திவிடலாம், யாரும் எங்களை மறுக்க முடியாது” என்று ஆணவத்து டன் கூறினார். ஆனால் சான்செஸ் நேரடியாக வாஷிங்ட னைக் குறிப்பிடாமலேயே, “பழிவாங்கல்க ளுக்கு நாங்கள் பயப்படமாட்டோம்” என்று பதிலடி கொடுத்தார். ஸ்பெயின் அரசும், “வணிக உறவுகளில் எந்த மாற்றமும் சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டே நடக்க வேண்டும்” என்று அறிக்கை வெளியிட்டது. இதற்கிடையில், ஸ்பெயின் தனது நிலைப்பாட்டை மாற்றிவிட்ட தாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் பரப்பிய பொய்யை ஸ்பெ யின் வெளியுறவுத் துறை அமைச்சர் அல்பாரஸ் உடனடியாக மறுத்தார்.

“ஸ்பெயின் அரசின் நிலைப்பாட்டில் ஒரு கமா கூட மாறவில்லை” என அவர் திட்டவட்டமாகக் கூறினார். வரலாற்றிலிருந்து கற்க வேண்டிய பாடம் ஸ்பெயின் பிரதமர் சான்செஸ், இராக் படை யெடுப்பை நினைவூட்டி கடந்தகால தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது என்று உலக நாடுகளை எச்சரித்தார். பெரும்பாலும் பெரும் போர்கள் தவ றான கணிப்புகள் மற்றும் எதிர்பாராத சூழ்நிலை களால் கட்டுக்கடங்காமல் போகும் என்று வர லாறு கற்பிப்பதாகக் குறிப்பிட்ட அவர், “லட்சக்க ணக்கான மக்களின் எதிர்காலத்தில் உயிரைப் பணயம் வைத்து யாரும் ரஷ்யன் ரூலட் (கணிக்க முடியாத மரணச் சூதாட்டம்) விளையாட முடி யாது” என்றார். “நாம் அனைவரும் சேர்ந்து இந்த வன்முறை நிறுத்தத்திற்குக் கோரிக்கை வைக்க வேண்டும். ஐநா சாசனத்துடனும், சர்வதேசச் சட்டத்துடனும் நாங்கள் உறுதியாக நிற்கிறோம் - அதாவது, அமைதியுடன் நிற்கிறோம்” என்று தனது உரையை நிறைவு செய்தார். நேட்டோ கூட்டாளியா? விமர்சகர்களா? நேட்டோ அமைப்பில் முக்கியமான ராணுவக் கூட்டாளியாக ஸ்பெயின் இருந்தாலும், பிரத மர் சான்செஸ் ஐரோப்பாவின் முக்கிய முற்போக்குத் தலைவராகக் கருதப்படுகிறார்.

கடந்த ஆண்டு நேட்டோ உச்சிமாநாட்டில் ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்க அமெரிக்கா அழுத்தம் கொடுத்த போதும், “ஸ்பெயினின் பாதுகாப்புத் தேவைகளை 2.1 சதவீதத்திலேயே நிறைவேற்ற முடியும்” என்று கூறி டொனால்டு டிரம்பின் உத்தரவை ஏற்க மறுத்தார். இதனால் டிரம்ப் ஸ்பெயினை “மோசமான கூட்டாளி” என்று விமர்சித்தார். ஐரோப்பிய ஒற்றுமையும் ஈரானின் பாராட்டும் இந்நிலையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெ ஷ்கியன் ஸ்பெயினின் துணிச்சலான நிலைப் பாட்டைப் பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேபோல், ஐரோப்பிய ஒன்றியமும் ஸ்பெயி னுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளது. டிரம்ப் ஸ்பெயின் மீது வர்த்தகத் தடை விதிக்க முயன்றால், ஐரோப்பிய ஒன்றியம் ஒட்டுமொத்த மாகப் பதில் நடவடிக்கை எடுக்கும் என்று ஐரோப்பிய ஆணைய செய்தித் தொடர்பாளர் ஒலோஃப் கில் உறுதிப்படுத்தினார். ஸ்பெயினின் இந்த வரலாற்று முக்கியத்து வம் வாய்ந்த நிலைப்பாடு, போருக்கு எதிரான உலகளாவியக் குரல்களை மேலும் வலுப்படுத்தி யுள்ளது. முற்போக்குச் சர்வதேச அமைப்பு (Progressive International) ஸ்பெயினின் துணிச் சலை வரவேற்று, ஐரோப்பாவில் உள்ள அனைத்து அமெரிக்க ராணுவத் தளங்களையும் மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.