world

img

தீக்கதிர் உலக செய்திகள்

இந்தியாவின் கனிம வளங்களை அமெரிக்காவுக்கு அள்ளிக்கொடுக்க மோடி திட்டம்

வாஷிங்டன்/புதுதில்லி, பிப்.5- இந்தியாவில் உள்ள முக்கிய கனிமங்களை அமெரிக்காவுக்கு அள்ளிக்கொடுக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது.  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அரசுமுறைப் பயணமாக பிப்.2-4 வரை அமெரிக்காவிற்கு சென்றார். இந்த பயணத்தில் அவர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவைச் சந்தித்துப் பேசியுள்ளார்.  இந்த சந்திப்பில் இந்தியாவில் உள்ள கனிமங்களை தோண்டி எடுப்பது மற்றும் சுத்திகரிப்பதில் இருதரப்பு ஒத்துழைப்பை உருவாக்குவது குறித்து மார்கோ ரூபியோ உடன் எஸ்.ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பிப். 4 புதன்கிழமையன்று அரிய கனிமங்கள் தொடர்பாக உலக நாடுகளின்  அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டத்தை அமெரிக்கா நடத்தியது. இந்த கூட்டத்திற்கு முன்னதாகவும் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டு விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்த மறுநாளும் இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது.  உலகளவில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான போட்டியில் அமெரிக்காவை விட சீனா வேகமாக முன்னேறி வருகிறது. குறிப்பாக செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனா அமெரிக்காவுக்கு நிகராக வளர்ந்து வரும் நாடாக உருவாகியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ள செமிகண்டக்டர் உற்பத்திக்கு தேவையான  அரிய கனிம வளங்கள், அதன் சுத்திகரிப்பு ஆகிய இரண்டின் மீதும் சீனா பெரும்பான்மை கட்டுப்பாட்டை வைத்துள்ளது.  இந்நிலையில் அரிய கனிமங்கள் மற்றும் காந்தங்கள், ஆற்றல் உற்பத்திக்கான உயர்தர கச்சா எண்ணெய் ஆகியவற்றுக்காக கிரீன்லாந்து, வெனிசுலா என இயற்கை வளம் நிறைந்த நாடுகளின் மீது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.  தற்போது அமெரிக்காவில் நடைபெறும் அரிய கனிமங்கள் தொடர்பான  மாநாட்டில், தொழில்நுட்ப புத்தாக்கம் மற்றும் தேசிய பாதுகாப்புக்குத் தேவையான முக்கிய கனிமங்களின் விநியோகச் சங்கிலியைப் பலப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.   அமெரிக்கா- இந்தியாவுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் முன் இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அமெரிக்காவின் கனிம தேவைக்கு சேவை செய்யும் வகையில்  அரிய வகை கனிமங்களுக்கான ரயில் வழித்தடம் திட்டத்தைக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு  வெளிப்படைத்தன்மை அறிக்கை கட்டாயம் 

2024 முதல் 2025 வரை மட்டும், ஆஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கு எதிரான இணைய வழியிலான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான சுமார் 83,000 புகார்கள் பெறப்பட்டுள்ளன. முன்னணி சமூக வலைதளங்களிலேயே இத்தகைய துஷ்பிரயோகங்கள் வெளிப்படையாக நடப்பதைக் கருத்தில் கொண்டு, ஆஸ்திரேலிய இணையப் பாதுகாப்பு ஆணையர் ஜூலி இன்மேன் கிராண்ட், கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் ஒருமுறை வெளிப்படைத்தன்மை அறிக்கைகளை  சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை 300 ஊழியர்கள் பணி நீக்கம் 

செயற்கை நுண்ணறிவு  மாற்றங்களுக்கு ஏற்ப வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நிறுவனம், 300க்கும் மேற்பட்ட தனது ஊழியர்க ளை பணியில் இருந்து நீக்கம் செய்துள்ளது.  அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸுக்கு சொந்தமான வாஷிங்டன் போஸ்ட் நிறுவனம், விளையாட்டு மற்றும் புத்தகங்கள் தொடர்பான செய்திகளை வழங்கும் பிரிவுகளை சேர்ந்தவர்களை நீக்கியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஒட்டுமொத்த செய்திக்குழுவினரும், உக்ரைனில் போர்க்களத்தில் செய்தி சேகரித்து கொண்டிருந்த செய்தியாளரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய - கனட வெளியுறவு   அமைச்சர்கள் சந்திப்பு 

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்துடன் இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி பேசியுள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற அரிய கனிம வளங்கள் தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற அவர் இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளார். இது பற்றி பேசிய ஜெய் சங்கர், கனடா அமைச்சருடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது; இரு நாடுகளின் உறவுகளை சிறப்பாக முன்னெடுத்து செல்வது பற்றி பேசினோம்; பெரு நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹியூகோ டி ஜெலாவையும் சந்தித்தேன் எனக் கூறியுள்ளார்.

அமைதிப் பேச்சுவார்த்தையை  குலைக்க ஐரோப்பா முயற்சி - ரஷ்யா  

உக்ரைன்-ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தை யை  ஐரோப்பா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த “போர்வெறியர்கள்” சீர்குலைக்க முயற்சிப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்கப் பிரதிநிதிகள் அரபு அமீரகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலை யில் இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்ற மும் சாதகமான நகர்வுகளும் இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடினின் தூதர் கிரில் டிமிட்ரிவ் தெரிவித்துள் ளார்.  மேலும் இடையூறு முயற்சிகள் அதிகமாகும் போதே, அமைதிப் பேச்சுவார்த்தை உறுதியான பாதையில் செல்வதை உணர முடிகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் இஸ்ரேல் வெறிச்செயல்: காசாவில் 24 பேர் படுகொலை 

காசா மீது இஸ்ரேல் மீண்டும் குண்டு வீசியுள்ளது. இத்தாக்குதலில் 11 வயது சிறுமி உட்பட பெண்கள், குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் எட்டப்பட்ட “போர்நிறுத்த” ஒப்பந்தத்தை இஸ்ரேல் தொடர்ந்து மீறி வருகிறது. குறிப்பாக போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து 1,520 முறை அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியுள்ளது. மேலும் இஸ்ரேல் ராணுவத்தால்  மொத்தம் 556 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  1500 பேர் படுகாயமடைந்துள்ளனர்.