world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ஜப்பானின் போர் வெறி : உலக அமைதிக்கு அச்சுறுத்தல்  

ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி அமெரிக்காவுக்கு ஆதரவாக போர் வெறிக்கருத்துக்களை பேசி வருகிறார். இது சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் ஐ.நா-வுக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி ஃபூ காங்  ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ்-க்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ஜப்பானின் போர் வெறிக்கருத்துகள் மற்றும் முயற்சிகள் உலக அமைதி, சர்வதேச ஒழுங்கிற்கு ஒரு அச்சுறுத்தல் என்று சீனா தெரிவித்துள்ளது.  

புடின் அமைதியை விரும்புகிறார் - எனக்கு நம்பிக்கை உள்ளது : டிரம்ப்  

ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார் என்று தான் நம்புவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க தூதர் புடினுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படவில்லை. ஐரோப்பிய நாடுகள் போர் நிறுத்தத்திற்கு எதிராக இருப்பதாக புடின் குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில் அமெரிக்க அதிகாரிகள் மீண்டும் உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகி வரும் நிலையில் டிரம்ப் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

டிரம்ப்புடன் நல்ல உரையாடல் நடந்தது: வெனிசுலா ஜனாதிபதி  மதுரோ  

வெனிசுலா ஜனாதிபதி மதுரோ, கடந்த வாரம் டிரம்ப்புடன் தொலைபேசி வழியாக உரையாடியதை உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர், நான் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடன் பேசினேன். அந்த உரையாடல் மரியாதையுடன் இருந்தது என்று மதுரோ அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சியில் பேசியுள்ளார்.  அமெரிக்க ராணுவம் தனது கப்பற்படை மூலம் கரீபியன் கடல் பகுதியில் இதுவரை  22 கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தி 83 பேரைக் கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மலேசிய விமானத்தை தேடும் பணி மீண்டும் துவங்குகிறது  

2014 மார்ச் 8 அன்று காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணி வரும் டிச.30 ஆம் தேதி மீண்டும் துவங்க மலேசிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 11 ஆண்டுகளுக்கு முன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் போயிங் விமானம் (எம்எச் 370) மாயமானது. பயணம் செய்த பயணிகள் குறித்து இதுவரை தகவல் இல்லை. செயற்கைக்கோள் தரவுகளின்படி, விமானம் அதன் பறக்கும் பாதையிலிருந்து விலகி தெற்கே தொலைதூர இந்தியப் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது.

உடல்நலக் கோளாறுகள்: கோலா, நெஸ்லே மீது வழக்கு

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகர அரசு, கோகோ கோலா, நெஸ்லே, ஓரியோ, கிட் கேட், பெப்ஸிகோ, கிராஃப்ட், ஹெயின்ஸ், கெலாக்ஸ் சாக்கோஸ், மார்ஸ் ஆகிய பிரபலமான  கார்ப்பரேட் நிறுவனங்களின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது.   இந்த நிறுவனங்கள் அதிகப் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களைத் தயாரிக்கிறது. இதனால் மக்களுக்கு அதிகளவில் நீரழிவு, கல்லீரலில் கொழுப்பு நோய் மற்றும் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் உருவாகி வருகிறது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.