தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த 2 நீதிபதிகள் அமர்வு! திருப்பரங்குன்றத்தில் தொடரும் கலவர முயற்சி மிரட்டல் அடாவடியை மீண்டும் ஆரம்பித்தார் ஜி.ஆர். சுவாமிநாதன்
மதுரை, டிச. 4 - திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில், நீதிபதி ஜி.ஆர். சுவாமி நாதனின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி, தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுவை, இரண்டு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து, அவமதிப்பு வழக்கை மீண்டும் கையில் எடுத்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர் உள்ளிட்ட அதி காரிகளை உடனடியாக காணொளி மூலம் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
வியாழக்கிழமை இரவே மனுதாரர் ராம. ரவிக்குமார் தர்ஹா அருகே தீபம் ஏற்றுவார், என்றும்; அதற்கு காவல் துறை ஆணையர் லோகநாதன் பாது காப்பு தருவதுடன், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தியதற்கான அறிக்கையை வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றதுடன், 144 தடை உத்தரவை ரத்து செய்வதாகவும் அறிவித்தார். முன்னதாக, தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் பதிவுசெய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி தமிழக அரசும், சிக்கந்தர் தர்ஹா அருகில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து, திருப்பரங் குன்றம் முருகன் கோவில் செயல் அலு வலர் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள், நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே. ராம கிருஷ்ணன் ஆகியோர் முன்பு வியாழ னன்று விசாரணைக்கு வந்தது. அப் போது, தமிழக அரசு, அறநிலையத் துறை, தர்ஹா நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதங்களை வைத்தனர்.
அரசுத் தரப்பில் விரிவான வாதம் குறிப்பாக, அரசுத் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி வாதிடுகையில் பல்வேறு முக்கிய அம்சங்களைக் குறிப்பிட்டார். “தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் டிசம்பர் 1 அன்று அளித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு ‘போதிய கால அவகாசம் இல்லை. வழக்கமாக மேல்முறையீடு செய்வ தற்கு 30 நாள் அவகாசம் உள்ளது. ஆனால், தொடக்க நிலையிலேயே நீதி மன்ற அவமதிப்பு நடந்துள்ளதாக நீதி பதி ஜி.ஆர். சுவாமிநாதன் முடிவுக்கு வந்துள்ளார். உச்சநீதிமன்ற வழிகாட்டு தலுக்கு எதிராக நடந்து கொண்டுள்ளார். அப்படியே அவமதிப்பு வழக்கு தொடர்ந்தாலும், சட்டப்படி நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதையும் செய்ய வில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை தான் வழங்க முடியும். நீதி பதி 5 மணிக்கு விசாரித்து திட்டமிட்டே உத்தரவிட்டுள்ளார்’’ என்றார். நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அதிகார வரம்பை மீறினார் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் செயல்பாடு, நீதித்துறை வரம்பிற்கு அப்பாற்பட்டது. அவர் அதிகார வரம்பை மீறிச் செயல்பட்டது துரதிர்ஷ்டவச மானது. உயர்நீதிமன்றத்திற்குப் பாது காப்பு வழங்குவதே சிஐஎஸ்எப்-இன் பணி. அவர்களின் அதிகாரம் நீதிமன்ற எல்லைக்குள் மட்டுமே. சிஐஎஸ்எப் ஒரு போலீஸ் பிரிவு அல்ல.
அவர்களை எப்படி, சட்டம் - ஒழுங்கு பிரச்சனையில் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட முடி யும்?” என்று கேள்விகளை எழுப்பினார். 100 ஆண்டு மரபை உடனடியாக மாற்ற முடியுமா? அதேபோல “100 ஆண்டுகளாக உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இதை உடனடியாக மாற்ற இயலுமா?” என்று கோவில் நிர்வாகம் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. “மனுதாரர் ராம.ரவிகுமார் 10 நபர்களோடு சென்று மட்டுமே தீபம் ஏற்றி வணங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பெரும் கூட்டத்தோடு சென்று சட்டம் - ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தினார். பேரிகார்டுகள் உடைக்கப்பட்டன, காவலர்கள் தாக்கப்பட்டனர், மதப் பிரச்சனை ஏற்படும் நிலை உருவா னது. சமூக அமைதி பாதித்துள்ளது. தமிழக அரசின் அச்சம் உண்மையாகிப் போனது. இதற்கான போதுமான வீடி யோ ஆதாரம் உள்ளது. எனவே, மனு தாரர் ரவிக்குமார் மீதே நீதிமன்ற அவ மதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் எடுத்துரைக்கப்பட்டது. தர்ஹா தரப்பையே சேர்க்காதது ஏன்? மேலும், “தர்ஹா தரப்பில், மேல்முறையீடு செய்யப் போதிய கால அவகாசம் வழங்கவில்லை. ரிட் மனுவில் தர்ஹா தரப்பையே சேர்க்க வில்லை. 30 நாட்கள் மேல்முறையீடு செய்ய அவகாசம் இருக்கையில் விளக்கம் அளிக்க ஓரிரு நாள் கூட அவகாசம் தரவில்லை. அத்துடன், நூறாண்டிற்கு மேலாக ஏற்றப்படும் இடத்தை உடனடியாக ஏன் மாற்ற வேண்டும்?” என்றும் கேட்கப்பட்டது. “தீபத்தூண் என்று கூறப்படும் இடத்தில் 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்பட்டதில்லை. கார்த்திகை தீபம் என்பது ஒரு இடத்தில் தான் ஏற்றப்படும். 100 வருடங்களாக இல்லாத வழக்கத்தை சிஐஎஸ்எப்-ஐ பயன்படுத்தி எப்படி செய்ய முடியும்?” என்றும் தர்ஹா தரப்பு கேள்வி எழுப்பியது. ஒருமுறை தீபம் ஏற்றுவதால் பிரச்சனை இல்லையாம் அப்போது, “மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் அவகாசம் உள்ள நிலையில், ஏன் உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தாக்கல் செய்தீர்கள்?” ராம.ரவிக்குமாரைப் பார்த்துக் கேட்ட நீதிபதிகள், மறுபுறத்தில், “வருடத்திற்கு ஒரு முறை ஏற்றும் தீபத்தால் எப்படி மத நல்லிணக்கம் பாதிக்கப்படும்? யாருக்கும் பாதிப்பு இல்லாமல் தீபம் ஏற்றுவதை ஒரு தரப்பு ஏன் தடுக்க வேண்டும்?” என்று அரசுத் தரப்பிடமும் கேட்டனர்.
மேலும், “ஒரு மதத்தின் நம்பிக்கையை தடுப்பது எப்படி சமூக நல்லிணக்கம் ஆகும்?” என்றும் கேள்வி எழுப்பினர். சர்ச்சைக்குரிய தீர்ப்பு அரசு மனு தள்ளுபடி மேலும், “தனி நீதிபதியின் உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதாலே சிஐஎஸ்எப் பாதுகாப்புடன் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறை தனது கடமையைச் செய்யத் தவறியதால் சிஐஎஸ்எப் உள்ளே கொண்டுவரப்பட்டது. இதில் எந்த விதிமீறலும் இருப்பதாகத் தெரிய வில்லை. மாநில அரசு தனது கடமையைச் செய்யத் தவறியதால்தான் தனி நீதிபதி மீண்டும் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு தான், ஏதோ நோக்கத்துடன் வழக்குத் தொடர்ந்துள்ளது” என்று கூறிய 2 நீதிபதிகள் அமர்வு, ஜி.ஆர். சுவாமிநாத னின் நீதிமன்ற அவமதிப்பை ரத்துசெய்யக் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த ஜி.ஆர். சுவாமிநாதன் இதையடுத்து, தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜி.ஆர்.
சுவாமிநாதன் மீண்டும் விசாரணைக்கு எடுத்தார். அவரிடம், தீபம் ஏற்றும் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த பிறகு, நீதி மன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க வேண்டும்; உணர்வுப் பூர்வமான விஷயம் என்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும்; 4 வாரம் கால அவகாசம் அளிக்க வேண்டும்; சட்டப்படி உரிய பதில் அளிப் போம் என அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.ஆனால், அதனை ஏற்க நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தயாராக இல்லை. அதிகாரிகள் ஆஜராக தடாலடி உத்தரவு “எனது உத்தரவால் யாரும் பாதிக்கப்பட வில்லை; ஆசிர்வதிக்கப் பட்டிருக்கிறீர்கள்; அரசுத் தரப்பு வழக்கறிஞர் கொஞ்சம் உணர்வுப்பூர்வ மாக நடந்திருக்கலாம்’’ என்று எள்ளல் தொனியில் கூறிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், “திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற முன்னேற்பாடு செய்யாத அலுவலர்கள் மீது வழக்கு தொடரப்படும். மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாக அதிகாரி ஆகியோர் உடனடியாக காணொலியில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். கடும் உத்தரவு பிறப்பிப்பேன் என எச்சரிக்கை இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறி ஞர், ஐந்து நிமிடத்தில் ஆஜராக வேண்டும் என்றால் எப்படி முடியும்?என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு, இந்து அறநிலையத்துறை செயல் அலு வலரையும் ஆஜராக உத்தரவிட்டு இருக்கிறேன். ஆஜராகவில்லை என்றால் கடும் உத்தரவு பிறப்பிக்கத் தயங்க மாட்டேன் என்று ஜி.ஆர். சுவாமிநாதன் மிரட்டினார். நீதிமன்றத்தின் மதிப்பு புரிய வேண்டும் என்பதற்காகவே இதனைச் செய்கிறேன் என்றும் கூறிக் கொண்டார்.
இதையடுத்து, மதுரை காவல் ஆணையர் காணொலி வழியே ஆஜரானார். அவரிடம், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு காவல்துறை ஆணையர் விளக்கம் அளித்தார். இதையடுத்து, திருப்பரங்குன்றம் தர்ஹா அருகிலுள்ள தூணில் வியாழக்கிழமை மாலை 7 மணிக்குள், மனுதாரர் ராம.ரவிக்குமார் மூலம் தீபமேற்ற வேண்டும்; இதற்கு காவல்துறை ஆணையர் லோகநாதன் உரிய பாதுகாப்பு தர வேண்டும்; தீபம் ஏற்றப்பட்டதற்கான உத்தரவு நகலை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், 144 தடை உத்தரவையும் நீக்குவதாக அறிவித்தார். 144 தடை உத்தரவு ரத்துக்கு எதிராக அரசு மேல்முறையீடு முன்னதாக, நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் திருப்பரங்குன் றத்தில் கூடி, பதற்றத்தை ஏற்படுத்தும் வேலை களில் ஈடுபட்டனர். கலைந்து செல்லுமாறு காவல்துறை கூறியும் அவர்கள் அதைக் கேட்பதாக இல்லை. ஒரு கட்டத்தில், தடுப்புக்களை தள்ளிவிட்டு, காவல்துறையினர் மீதே தாக்குதல் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நயினார் நாகேந்திரன் கைது நயினார் நாகேந்திரன் தன்னை சுவாமி தரிசனத்திற்கு கூட்டமாக அனுமதிக்க வேண்டும் என்று 16 கால் மண்டபம் பகுதியில் தகராறில் ஈடு பட்ட நிலையில், கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு முருகன் கோவிலில் இருந்து வந்த சாமி ஊர்வலம், தொடர்ந்து செல்ல முடியாமல் திரும்பிச் சென்றது. பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். தொடர்ந்து பாஜகவினர் அடாவடியில் ஈடுபட்டு வந்த நிலையில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
