போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளை ஐரோப்பிய நாடுகள் நாசமாக்கி வருகின்றன
புடின் விமர்சனம்
மாஸ்கோ,டிச.3- நான்கு ஆண்டுகளாக நடந்து வரும் உக்ரைன்-ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டு வர எடுக்கப்படும் முயற்சிகளை ஐரோப்பிய நாடுகள் நாசமாக்கி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் கடுமையாக விமர்சித்துள்ளார். உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தத்தை கொண்டு வருவதற்காக இரண்டு வாரங்க ளுக்கு முன்பு 28 அம்சங்கள் கொண்ட “அமை தித் திட்டம்” முன்மொழியப்பட்டது. இந்தத் திட்டம் பெருமளவு ரஷ்யாவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இருந் தது. அதாவது ரஷ்யா வசம் உள்ள உக்ரைன் நிலங்கள் ரஷ்யாவிற்கே சொந்தம். உக்ரைன் தனது ராணுவத்தின் அளவை குறைக்க வேண்டும், நேட்டோ உறுப்பினராகக் கூடாது என்பது போன்ற முன்மொழிவுகள் இருந்தது என உக்ரைன் குற்றம் சாட்டியது. இதன் பிறகு அமெரிக்கா, உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் நவம்பர் 23 அன்று ஜெனீவாவில் சந்தித்துத் திட்டம் குறித்து விவாதித்தனர். அதன் பிறகு இந்த திட்டத்தில் ரஷ்யாவிற்கு சாதகமாக உள்ளதாக கூறப்பட்ட முன்மொழிவுகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன் பிறகு அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ, சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் ஞாயிற்றுக் கிழமை (நவம்பர் 30) புளோரிடாவின் ஹாலண்டேல் கடற்கரையில் உக்ரைன் தூதுக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பிறகு இந்த முன்மொழிவுகள் குறித்து ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக விட்காஃப், டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் தலைமை யிலான அமெரிக்கப் பிரதிநிதிகள் குழு ரஷ்யா சென்றுள்ளது. இந்த குழுவுடன் சந்திப்பு நடத்துவதற்கு முன் பத்திரிகையாளர்களிடம் பேசிய புடின், உக்ரைனின் கூட்டாளியாக உள்ள ஐரோப்பிய நாடுகளிடம் அமைதிக்கான திட்டம் இல்லை. அவர்கள் போரின் பக்கமே உள்ளனர். போர் நிறுத்த முன்மொழிவுகளை, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளுடன் திருத்தி, முழு சமாதானத்தை நோக்கி செல்லும் செயல்முறையையும் தடுத்து நிறுத்திவிட்டது. ஆனால் போர் தொடர்வதற்கு காரணம் ரஷ்யா எனக் குறை கூறுகிறது. ரஷ்யாவுக்கு ஐரோப்பாவைத் தாக்கும் திட்டம் இல்லை. ஆனால், ஐரோப்பா திடீ ரென்று எங்களுடன் போர் தொடுக்க விரும்பி னால், போரைத் தொடங்கினால் அதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம் எனவும் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
