tamilnadu

img

நாட்டின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் டாக்டர் கே.என். பணிக்கர் காலமானார்

நாட்டின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்  டாக்டர் கே.என். பணிக்கர் காலமானார்

திருவனந்தபுரம், மார்ச் 9 - நவீன இந்தியாவின் முன்னணி வரலாற்றா சிரியர்களில் ஒருவரான டாக்டர் கே.என். பணிக்கர் திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.யு.டி மருத்துவமனையில் காலமானார். கேரள வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் அவரது தொண்ணூறாவது பிறந்தநாளைக் கொண்டாடவிருந்த நிலையில் அவர் காலமானார். குருவாயூரில் உள்ள தைக்காட்டில் குஞ்சுபரம்பில் கிருஷ்ணன் நாயர் - கண்டியூர்  இப்புகட்டியம்மா தம்பதிக்கு 1936-இல் மக னாகப் பிறந்த கே.எம். பணிக்கரின் முழுப் பெயர்: கண்டியூர் நாராயண பணிக்கர் என்பதாகும். ஒரு வரலாற்றாசிரியர், அறிவுஜீவி, மதச்சார்பின்மையின் பாதுகாவலர், கலாச்சார ஆர்வலர் மற்றும் கல்வியாளர் என  கே.என். பணிக்கரின் பங்களிப்புகள் விலை மதிப்பற்றவை. அவர் நீண்ட காலமாக தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழ கத்தில் பேராசிரியராக இருந்தார். இந்திய மதச்சார்பின்மையின் பாதுகாவ லராக கே.என். பணிக்கரை வரலாறு குறிக்கிறது. இந்தியாவில் இந்துத்துவா அரசியலின் நுழைவையும், புறநிலை வரலாற்று எழுத்து மூலம் அதன் சித்தாந்த மேலாதிக்கத்திற்கான நகர்வுகளையும் எதிர்த்த டாக்டர் கே.என். பணிக்கர், இதன் பெயரில் வகுப்புவாத சக்திகளிடமிருந்து தாக்குதல்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பாலக்காட்டில் உள்ள விக்டோரியா கல்லூரியில், இளங்கலை படிக்கும் போது கல்லூரி மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்த பணிக்கர், முதுகலை மற்றும் முனை வர் பட்டத்தை ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.  ராஜஸ்தான் பல்கலைக்கழகம் மற்றும் புது தில்லியில் உள்ள இந்திய பொது நிர்வாக நிறுவனத்தில் ஆசிரியராக பணியாற்றிய அவர், தனது வகுப்புத் தோழியான ராஜஸ்தானைச் சேர்ந்த உஷா பார்கவாவை திருமணம் செய்துகொண்டார். உஷா பார்கவா ஏற்கெனவே இறந்து விட்டார். இவர்களுக்கு ராகினி, ஷாலினி என்ற இரு மகள்களும், பீதாம்பர், ஆர்.வி. ராமன் ஆகிய மருமகன்களும் உள்ளனர். தில்லி பல்கலைக்கழகத்தின் ஹான்ஸ் ராஜ் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய கே.என். பணிக்கர், 1972 முதல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், துறைத்தலைவர் மற்றும் சமூக அறிவியல் பிரிவின் டீனாகப் பணியாற்றினார். பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 2001 முதல் 2017 வரை கேரள வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவராக இருந்தார். 2008 இல் இந்திய வரலாற்று காங்கிரஸின் தலைவரானார். 2000-2001 இல் ஸ்ரீ சங்கராச்சாரியா சமஸ்கிருத பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். 2007-2011 வரை கேரள உயர்கல்வி கவுன்சி லின் துணைத் தலைவராக இருந்தார்.