எத்தியோப்பியாவில் தீ விபத்து : நூற்றுக்கணக்கான கட்டடங்கள் நாசம்
எத்தியோப்பியாவின் அஃபார் பிராந்தியத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 1,800க்கும் மேற்பட்ட கட்டடங்கள் எரிந்து போயுள்ளன. ஜூலை 18 வியாழன்று நண்பகல் நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் மளமளவென பரவிய தீயில் 600 கடைகள், 950 உணவகங்கள் மற்றும் 255 வீடுகள் என சுமார் 1805 கட்டடங்கள் முற்றிலுமாக சேதமடைந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
துரோகம் செய்த முன்னாள் ஜனாதிபதி மீது கட்டுப்பாடு
பிரேசில் முன்னாள் ஜனாதிபதி போல்சானரோ மற்றும் அவரது மகன் எட்வர்டோ போல்சானரோ மீது கடுமையான சட்டக் கட்டுப்பாடுகளை விதிக்க அந்நாட்டு நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போல்சானரோ விசாரணையில் உள்ள நிலையில் தன்னை காப்பாற்றிக் கொள்ள அமெரிக்காவை பிரேசில் அரசியலில் தலையிட வைத்துள்ளார். இதனால் பிரேசில் இறையாண்மை மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அகதிகளுக்கான நிதி வெட்டு ஆபத்தை உருவாக்கும்
அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் மனிதாபிமான உதவிகளுக்கான நிதிகளை வெட்டுவதால் 1.1 கோடிக்கும் அதிகமான அகதிகளின் வாழ்க்கை ஆபத்தில் தள்ளப்படும் என ஐ.நா அவை எச்சரித்துள்ளது. போர்கள், வறுமை காரணமாக மக்கள் இடம்பெயரும் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு உலகளவில் அகதிகளுக்கு உதவ 10.6 பில்லியன் டாலர்கள் தேவைப்படும். ஆனால் இதுவரை இதில் 23 சதவீத நிதி மட்டுமே ஐ.நா., விற்கு கிடைத்துள்ளது.
ஸ்வேய்தாவில் மீண்டும் போர் நிறுத்த அறிவிப்பு
சிரியாவில் உள்ள ஸ்வேய்தா மாகாணத்தில் மீண்டும் போர் நிறுத்தத்தை அறிவித்துள் ளது அந்நாட்டு அரசு. ஏற்கனவே அறிவித்த போர் நிறுத்தத்தை 2 முறை துரூஸ் இன ஆயுதக்குழு மீறியதால் அங்கு ராணுவத்தை அனுப்ப சிரிய அரசு முடிவெடுத்தது. அப்படிச் செய்தால் இஸ்ரேல் மீண்டும் அங்கு தாக்குதல் நடத்தும் என்ற சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவின் உத்தரவின் பேரில் இந்த போர் நிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த போர் நிறுத்த அறி விப்பை டிரம்ப்பும் வெளியிட்டுள்ளார்.
கல்விக்காக அமெரிக்கா செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை சரிவு
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர் சேர்க்கையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு மாணவர்கள் சார்ந்து டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள மிக மோசமான கட்டுப்பாடுகளின் தாக்கத்தின் காரணமாக நிராகரிக்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து கல்விக்காக அமெரிக்கா செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை சுமார் 70 சதவீதம் குறைந்துள்ளது.