ஈரான்-அமெரிக்கா இடையே மறைமுகப் பேச்சுவார்த்தை
ஈரான்-அமெரிக்காவுக்கு இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகப் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த முயற்சியில் பாகிஸ்தான் ஒரு பாலமாகச் செயல்பட்டு வருவதாகவும், இது நேரடிப் பேச்சுவார்த்தை அல்ல என்றும், பாகிஸ்தான் மூலமாக செய்திகள் பரிமாறிக் கொள்ளப்படும் ஒரு மறைமுக முயற்சி என்றும் இஷாக் தார் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானுடன் துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன.
சீனா ஒரு சிறந்த நட்பு நாடு : லூலா புகழாரம்
சீனா பிரேசிலின் “சிறந்த நட்பு நாடு” என்று அதன் ஜனாதிபதி லூலா புகழாரம் சூட்டியுள்ளார். பிரேசிலின் சிஏஓஏ வாகன நிறுவன தொழில் பூங்காவில் பேசிய போது, பிரேசிலின் மிகச்சிறந்த நட்பு நாடாக சீனா இருப்பதால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடையும் என அவர் கூறினார். சீனாவின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் பிரேசில் மற்றும் சீனா இடையிலான இருதரப்பு வர்த்தகம் சுமார் 188 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. இதன் மூலம் பிரேசிலின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா உருவெடுத்துள்ளது.
நேபாள பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்பு
நேபாளத்தின் புதிய பிரதமராக ராஷ்டிரிய சுதந்திரக் கட்சியின் (RSP) தலைவரான பாலேந்திர ஷா(35) வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.வேலை யின்மை, பொருளாதார நெருக்கடி சமூக ஊடகத்தடை ஆகியவற்றின் பின்னணியில் ஜென் சி தலைமுறையினர் அந்நாட்டில் பெரும் போராட்டத்தை நடத்தினர். இதனால் கே.பி சர்மா ஒலி தலைமையிலான அரசு ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் உருவானது. இதன் பிறகு 2026 மார்ச் 5 இல் அந்நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதில் ராப் பாடகரும் காத்மாண்டு மேயருமான பாலேந்திர ஷா பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். அவரது கட்சி தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வென்றது.
மெட்டா நிறுவனத்தில் ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்காகப் பெரும் தொகையைச் செலவிட்டு வரும், மெட்டா நிறுவனம் சுமார் ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நிறுவனத்தின் விற்பனை, ஆள்சேர்ப்பு, ‘ரியாலிட்டி லேப்ஸ், வன்பொருள் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள் பணி நீக்கப்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப் பட்டுள்ளது. அமெரிக்கா மட்டுமின்றி பிற நாடுகளில் பணியாற்றிவரும் ஊழியர்களையும் பணி நீக்கம் செய்வோம் என அந்நிறுவனம் கூறியுள்ளது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம், 1,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
அடிமை வர்த்தகத்திற்கு எதிராக ஐ.நா வரலாற்றுத் தீர்மானம்
அடிமை வர்த்தகத்தை “மனித குலத்திற்கு எதிரான மிக மோசமான குற்றம்” என்று அங்கீகரிக்கும் தீர்மானத்தை ஐ.நா அவை நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்தை மேற்கு ஆப்பிரிக்க நாடுகளும், ஆப்பிரிக்க ஒன்றியமும் வரவேற்றுள்ளன. இந்த தீர்மானத்தை அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் கடுமையாக எதிர்த்த நிலையிலும் ஐ.நா அங்கீகரித்துள்ளது. இந்த வரலாற்று முடிவு உண்மை, நீதி மற்றும் ஆற்றுப்படுத்துதலை நோக்கிய ஒரு முக்கியமான படி. அடிமைத்தனத்தின் நீடித்த வடுக்களைக் கையாள வேண்டிய அவசியத்தை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது என ஆப்பிரிக்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
போர்கள் மூலமாக கஜானாவை நிரப்பும் டிரம்ப் குடும்பம்
வாஷிங்டன், மார்ச் 27- ஈரான், பாலஸ்தீனம் மீதான போர் மூலமாக டிரம்ப் குடும்பமும் அவரது நண்பர்களும் தங்கள் கஜானா வை நிரப்பி வருகின்றனர். டிரம்பின் மகன்களான டொனால்டு ஜூனியர், எரிக் டிரம்ப் ஆகியோர் ‘அமெரிக்கன் வென்ச்சர்ஸ்’ (American Ventures) நிறுவனம் மூலம் சுமார் ரூ. 7,040 கோடி (750 மில்லியன் டாலர்) மதிப்பில் டிரோன் தயாரிப்பு நிறுவனங்களில் பங்குகளை வைத்து போருக்கு தேவை யான டிரோன்களை உற்பத்தி செய்து லாபம் ஈட்டி வருகின்றனர். அமெரிக்க ராணுவத்தில் டிரோன்களை அதிகளவில் பயன்படுத்தும் திட்டத்தை அந்நாட்டு பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் 2025 இல் அறிவித்தார். அதன் பிறகு அந்த திட்டத்துடன் டிரம்ப் மகன்களின் நிறுவனம் இணைந்துள்ளது. இதற்காக டிரம்ப் மகன்களுக்குச் சொந்தமான ‘ஆரியஸ் கிரீன்வே’ (Aureus Greenway) என்ற கோல்ப் நிறுவனம், ‘பவரஸ்’ (Powerus) என்ற டிரோன் நிறுவனத்துடன் இணைந்து, அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகனிடம் 10,326 கோடி ரூபாய் (1.1 பில்லியன் டாலர்கள்) மதிப்பிலான பெரும் ஒப்பந்தத்தைப் பெற முயன்று வருகின்றது. பாலஸ்தீனத்தில் குண்டு வீச இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்தும் டிரோன் உற்பத்தி நிறுவனங்களுடன் 14,081 கோடி ரூபாய் (1.5 பில்லியன் டாலர்கள்) எரிக் டிரம்ப் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர், காசா, மேற்கு ஆசிய நாடுகளில் போரால் சிதைக்கப்பட்ட பகுதிகளில் தனது ரியல் எஸ்டேட் நிறுவனம் மூலமாக புதிய கட்டுமானங்களை உருவாக்கும் கோடிக்கணக்கான ரூபாய் ஒப்பந்தங்களையும் பெற்று வருகிறார். குறிப்பாக டிரம்ப்பின் காசா மறு கட்டமைப்பு திட்டத்தின்படி காசாவில் பல புதிய கட்டடங்கள் கடற்கரை யோர ரிசார்ட்டுகள் கட்டுவதற்காக 30 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான கட்டுமானத் திட்டத்தை ஜாரெட் குஷ்னர் வைத்துள்ளார். மேலும் அவரது “அஃபினிட்டி பார்ட்னர்ஸ்’ நிறுவனம் மூலம் இஸ்ரேலின் கடற்படைக்குத் தேவையான ஏவுகணைப் படகுகளைத் தயாரிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். போரால் உலகம் முழுவதும் பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வரும் நிலையில் டிரம்ப்பிற்குத் தேர்தல் நிதியுதவி செய்த நெருங்கிய நண்பர்களின் பங்கு நிறுவனங்களும் இந்தப் போரில் கொழுத்த லாபம் பார்க்கின்றன. டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான பால்மர் லக்கி என்ற நிறுவனப் பங்குகள், ஈரான் போர் தொடங்கியதில் இருந்து 15% உயர்ந்துள்ளன. டொனால்டு ஜூனியர் ‘அன்யூசுவல் மெஷின்ஸ்’ (Unusual Machines) என்ற பங்குச் சந்தை நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இணைந்து, 2 லட்சம் பங்குகளை ($2.8 மில்லியன் மதிப்பு) ஊதியமாகப் பெற்றுள்ளார். அமெரிக்க ராணுவம் மற்றும் அரசின் ரகசிய தகவல்களை தெரிந்து கொண்டு அதன் அடிப்ப டையில் டொனால்டு ஜூனியர் பங்கு நிறுவனங்களுக்கு ஆலோசனை கொடுத்து உதவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஒருபுறம் போராலும் அதன் பாதிப்புகளாலும் மக்கள் மடிந்து கொண்டுள்ள நிலையில் டிரம்ப் குடும்பமும் அவரது நண்பர்களும் லாபத்தில் கொழிக்கின்றனர்.
