ரயில்களில் தட்கல், பிரீமியம் தட்கல் மற்றும் டிக்கெட் ரத்து கட்டணங்களின் மூலம் கிடைத்த வருவாய் தொடர்பான தகவல்களை வெளியிட ஒன்றிய அரசு மறுத்துள்ளது.
மாநிலங்களவையில் சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் ரயில்களில் தட்கல், பிரீமியம் தட்கல் மற்றும் டிக்கெட் ரத்து கட்டணங்களின் மூலம் கிடைத்த வருவாய் குறித்த விவரங்கள் குறித்து கேள்வியெழுப்பினார்.
அவரது கேள்விக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே வருவாய் தகவல்களை வழங்க முடியாது என பதிலளித்தார்.
இதுகுறித்து ஜான் பிரிட்டாஸ் எம்.பி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
2023-ஆம் ஆண்டில், ஃபிளெக்ஸி ஃபேர், தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் ஆகியவற்றின் மூலம் பயணிகளிடமிருந்து கூடுதலாக ரூ.12,128 கோடி வசூலித்ததாக ரயில்வே ஒப்புக்கொண்டது. அதே சமயம், ரத்து கட்டணம் உள்ளிட்ட 5 5 [Miscellaneous Coaching Receipts) என்ற பெயரின் கீழ் மேலும் ரூ.7,674.63 கோடி வசூலிக்கப்பட்டதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 2026-இல், புதுப்பிக்கப்பட்ட புள்ளி விவரங்களைக் கேட்டபோது, இந்தத் தரவுகள் 'ஒட்டுமொத்த வருவாய்க் குழுவின் ஒரு பகுதி எனக் கூறி, தகவல்களை வெளியிட அரசு மறுக்கிறது.
நாடாளுமன்றப் பொறுப்புடைமையை மிகவும் சாதுரியமாக தவிர்க்கும் நிகழ்வுகளின் தொகுப்பை யாராவது உருவாக்கினால், இன்றைய பதில் நிச்சயமாக அதில் ஒரு சிறந்த உதாரணமாக இடம்பெறத் தகுதியானது. ஏன் இந்த ரகசியம்? என்ன மறைக்கப்படுகிறது? என கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
