world

img

தீக்கதிர் உலக செய்திகள்

பிப்ரவரி மாதம் தாய்லாந்தில் பொதுத் தேர்தல்

தாய்லாந்தில் 2026 பிப்ரவரி 8 அன்று பொது தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து பிரதமராக உள்ள அனுடின் சார்ன்விரகுல் 2025 செப்டம்பர் மாதம் பதவியேற்றார். கம்போ டியாவுடன் மீண்டும் போர் நடந்து வரும் சூழலில்  எதிர்க்கட்சி  அந்நாட்டின் அரசியலமைப்பை மாற்றக் கோரி அரசுக்கு அழுத்தங்களை கொடுத்து வருகின்றது. இந்த பின்னணியில் அனுடின்  நாடாளுமன்றத்தை கலைப்பதாக கடந்த வாரம் அறிவித்தார். இதற்கு அந்நாட்டு மன்னரும் அனுமதி வழங்கியுள்ளார்.  

மக்களை காப்பாற்றியவருக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பாராட்டு  

ஆஸ்திரேலியாவில் யூதர்கள் ஹனுக்கா கொண்டாடிய போது தந்தை, மகன் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் 16 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தின் போது 43 வயதான அஹமது அல் அஹமது என்ற இஸ்லாமியர் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரில் ஒருவரை புத்திசாலித்தனமாக சுற்றிவளைத்துப் பிடித்தார். இந்த துணிச்சலான செயலைச் செய்த அஹமதுவுக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சிகிச்சை பெற்று வரும் அஹமதை நேரில் சந்தித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீசும் பாராட்டு தெரிவித்தார்.

பாகிஸ்தானில் நிலநடுக்கம்  

பாகிஸ்தானின் கராச்சி நகரில் 5.2 ரிக்டர் என்ற அளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கராச்சியிலிருந்து சுமார் 87 கி.மீ தொலைவில் பலுசிஸ்தானில் 12 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை. முன்னதாக திங்கள்கிழமையன்று பலுசிஸ்தானின் அருகிலுள்ள பகுதிகளில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது.

ரஷ்ய சொத்துக்களை திருட ஆணையம்

ஐரோப்பிய ஒன்றியம் முடக்கி வைத்துள்ள ரஷ்யாவின் சொத்துக்களை திருட ஒரு ஆணையம் அமைக்கப்பட உள்ளது. அதாவது போரினால் உக்ரைனில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக இந்த ஆணையம் நிறுவப்படும் எனவும்  அந்த ஆணையம் பாதிப்புகளுக்கு ஏற்ப உக்ரைன் மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களில் இருந்து பணம் கொடுக்கும் எனவும் கூறப்படுகிறது.

கிழக்கு பசிபிக் கடலில் அமெரிக்கா  குண்டு வீச்சு  '

கிழக்கு பசிபிக் கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் 8 பேர் படுகொலையாகியுள்ளனர்.  இதனை அமெரிக்க ராணுவமே உறுதிப்படுத்தியுள்ளது. கரீபியன்  மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்துவதாகக் கூறி  இதுவரை 26 படகுகள் மீது குண்டு வீசி   95 நபர்களை அமெரிக்கா படுகொலை செய்துள்ளது.