tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர், டிச.16-  “மீண்டும் மஞ்சப்பை’’ பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.  இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாக சுற்றுச் சுழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மூலம் தடையை அமல்படுத்துவதற்கும், வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவதற்கும் முன்மாதிரியான பங்களிப்பைச் செய்த பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்க முன்மொழிகிறது. விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளம் (https://thanjavur.nic.in/)  மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் (WWW.tnpcb.gov.in) இணையதளத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனிநபர், அமைப்புத் தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும். விண்ணப்பங்களின் மென் நகலுடன், இரண்டு அச்சுப் பிரதிகள்(கடின நகல்) மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 15.01.2026 என மாவட்ட ஆட்சிர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன்களை உடனே வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, டிச.16-  கூட்டுறவு சங்கங்களில் விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு பயிர் கடன் மற்றும் விவசாய நகைக் கடன்களை உடனடியாக வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு. மதியழகன் தலைமையில் திங்கட்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாநிலக்குழு முடிவுகளை விளக்கி மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களிலும் விவசாயிகள் பயிர்கடன் மற்றும் விவசாய நகைக்கடனுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். விண்ணப்பித்து இரண்டு மாதங்களைக் கடந்தும் பெரும்பாலான கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய கடன் தொகைகளை மத்திய கூட்டுறவு வங்கிகள் வழங்க மறுத்து வருகின்றன. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து எங்களுக்கு உத்தரவு வரவில்லை என கைவிரிக்கும் போக்கு நீடிக்கிறது. தற்பொழுது விண்ணப்பி த்துள்ளவர்களில் பெரும்பகுதியினர் ஏற்கனவே கடன்பெற்று திரும்பச் செலுத்தியவர்கள்தான் மீண்டும் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் பெரும்பகுதியினர் கூட்டுறவு சங்கங்களில் திரும்ப கடன் வாங்கி செலுத்திவிடலாம் என நினைத்து தனியாரிடம் கடன்பெற்றே இந்தக் கடனை அடைத்துள்ளனர். விண்ணப்பித்து இரண்டு மாதங்களாகியும் கடன் கிடைக்காததால் தனியாரிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடனுக்காகவும், விவசாய நகைக் கடனுக்காகவும் விண்ணப்பித்து காத்திருக்கும் அனைவருக்கும் உடனடியாக கடன் தொகைகளை மத்திய கூட்டுறவு வங்கிகள் விடுவிக்க வேண்டும். புதுக்கோட்டை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிகளுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை. ஏற்கனவே, ஊராட்சியாக இருந்தபோது பெற்ற சலுகைகளை அவர்கள் இழந்துள்ளனர்.  இந்நிலையில், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறகும் அங்கு எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்யப்படாமல் இருப்பது ஏற்புடையது அல்ல. எனவே, புதுக்கோட்டை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு போர்க்கால அடிப்படையில் சாலை, குடிநீர், தெருவிளக்கு, தூய்மைப் பணி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பழைய நகரம் கிராமத்துக்கு  பேருந்து வசதி ஏற்படுத்தித்  தரக் கோரிக்கை

தஞ்சாவூர், டிச.16-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம், பழைய நகரம் பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, பழைய நகரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பெ. கருணாமூர்த்தி, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில், “பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், பழைய நகரம் ஊராட்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கோ, மருத்துவமனைகளுக்கோ, மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரி செல்வதற்கு, பேராவூரணிக்கோ, பட்டுக்கோட்டைக்கோ செல்வதற்கு பேருந்து வசதி இல்லாததால், சுமார் 10 கிலோமீட்டர் தூரம் நடந்தோ அல்லது இருசக்கர வாகனங்களில் சென்றோ தான் பேருந்தில் பயணிக்க வேண்டியிருக்கிறது. இந்த வழியாக ஏற்கனவே இயக்கப்பட்ட அரசுப் பேருந்து கடந்த பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது.  இதுகுறித்து, பலமுறை கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றியும், அரசு அலுவலர்கள், போக்குவரத்து துறையினருக்கு கோரிக்கை வைத்தும், இதுவரை பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படவில்லை.  எனவே, பேராவூரணியில் இருந்து, பொன்னாங் கண்ணிக்காடு, குறிச்சி, பழைய நகரம், சீவன் குறிச்சி, களத்தூர், சித்துக்காடு, திருச்சிற்றம்பலம் வழியாக பட்டுக்கோட்டை செல்வதற்கு கட்டணமில்லா மகளிர் இலவச சிறப்பு பேருந்து இயக்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

வைப்புத் தொகையை திரும்பப் பெற மோடி, அமித்ஷா வந்துதான் ஆக வேண்டும்! அமைச்சர் எஸ். ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை, டிச.16-  தேர்தலில் பாஜகவினர் வைப்புத் தொகையைத் திரும்பப் பெறுவதற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் படையெடுத்து வந்துதான் ஆக வேண்டும் என்றார் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி.  புதுக்கோட்டையில் திங்கட்கிழமை அவர் அளித்த பேட்டியில், “பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர், தேர்தல் பிரச்சாரத்துக்கு தமிழகம் வருவதாகச் சொல்கிறார்கள். தேர்தலில் பாஜகவினர் வைப்புத் தொகையைத் திரும்பப் பெற, அவர்கள் படையெடுத்து வந்துதான் ஆக வேண்டும். பீகாரைப் போல தமிழகம் இருக்காது. அரசு, ஆன்மீகத்துக்கு எதிரானதல்ல. இது தமிழக வாக்காளர்களுக்கு நன்றாகத் தெரியும். எல்லோரும் சமம் என்று சொல்லிக் கொண்டு யார் வேண்டுமானாலும் வரலாம். தமிழகத்துக்கு எந்த நிதியையும் கொடுக்க பிரதமரும், உள்துறை அமைச்சரும் வரப் போவதில்லை. இங்கிருந்து எடுத்து பிற மாநிலங்களுக்கு கொடுக்கத்தான் வருகிறார்கள்’’ என்றார்.

உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டுத் தொகைகள்  உரியவர்களிடம் ஒப்படைக்கும் முகாம்

பெரம்பலூர், டிச.16-  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 18.12.2025 அன்று  நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டுத் தொகைகள் மற்றும் பங்கு தொகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் முகாம் நடைபெற உள்ளது. இந்திய நிதி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், இந்த முகாம் 01.10.2025 முதல் 31.12.2025 வரை அனைத்து வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் மற்றும் பிற நிதித்துறை கிளைகளிலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமின் முக்கிய நோக்கம், நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கிக் கணக்குகள், நிலுவையில் உள்ள வைப்புத் தொகைகள், காப்பீட்டு தொகைகள், பங்குகள் மற்றும் பிற நிதி சொத்துக்கள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், உரிமையாளர்கள் அல்லது அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகள் தங்கள் உரிமை கோரப்படாத நிதிச் சொத்துக்களை மீட்டெடுக்க உதவுவதும் ஆகும்.  வங்கிக் கணக்குகள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருந்தாலோ அல்லது உரிமை கோரப்படாத வைப்புத் தொகைகளாக இருந்தாலோ, அவை ரிசர்வ் வங்கியின் வைப்புத் தொகையாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு மாற்றப்படும். பொதுமக்கள் தங்கள் வங்கி வலைதளங்கள் அல்லது ரிசர்வ் வங்கியின் UDGAM (https://udgam.rbi.org.in) மூலம் இதை சரி பார்க்கலாம். உரிமையாளர்கள் அல்லது சட்டப்பூர்வ வாரிசுகள் இந்த தொகைகளை எந்த நேரத்திலும் முறையான ஆவணங்களுடன் வங்கியினை அணுகி ஆதாரங்கள் சமர்பித்து பெற்று கொள்ளலாம்.  வங்கித்துறை, காப்பீட்டுத்துறை மற்றும் நிதி தொடர்பான துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த முகாமில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்குவார்கள். பொதுமக்கள் தங்கள் அடையாள ஆவணங்கள் மற்றும் தேவையான சான்றிதழ்களுடன் முகாமில் பங்கேற்று இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தங்களின் கோரப்படாத நிதி தொகையை மீட்டெடுக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார்.