நேட்டோவில் சேர அமெரிக்கா ஆதரவளிக்கவில்லை : ஜெலன்ஸ்கி
உக்ரைன் நேட்டோவில் சேர விரும்பியது. ஆனால் அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நட்பு நாடுகள் இதற்கு ஆதரவளிக்கவில்லை. எனினும் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நட்பு நாடுகளிடமிருந்து கிடைக்கும் சட்டப்பிரிவு 5-ஐப் போன்ற உத்தரவாதங்கள் பாதுகாப்பு அடிப்படையில் வேண்டும் என ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். எனினும் இந்த பாதுகாப்பு உத்தரவாதங்கள் பற்றி முழு விவரங்களை அவர் கூறவில்லை.
ஹனுக்கா கொண்டாடியவர்கள் மீது தாக்குதல்: ஐ.நா. கண்டனம்
ஆஸ்திரேலியாவில் ஹனுக்கா கொண்டாடிய யூதர்கள் மீது தந்தை - மகன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் தாக்குதலுக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற தாக்குதல்கள், சகிப்புத்தன்மை, நல்லிணக்கத்துடன் வாழ்வது, மனித மாண்பு ஆகிய அடிப்படை விழுமியங்களைத் தகர்க்கும் செயல் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சூடான் ஐ.நா. தளம் மீது டிரோன் தாக்குதல்
சூடானில் ஐ.நா அமைதிப் படையின் தளவாடங்கள் மையத்தின் மீது உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள துணை ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஆறு அமைதிப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் எட்டு வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இது துணை ராணுவம் பல போர்க் குற்றங்களை இனப்படுகொலையையும் அந் நாட்டில் தீவிரப்படுத்தி வருகிறது.
ஹமாஸ் தளபதி கொலை: இஸ்ரேல் அறிவிப்பு
காசா நகரில் கார் ஒன்றின் மீது குண்டு வீசி ஹமாஸின் மூத்த தளபதி ரயத் சயத்தை படுகொலை செய்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் ரயத் உள்பட நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். 25 பேர் க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். சயத் கொலையை ஹமாஸ் அமைப்போ, மருத்துவப் பணியாளர்களோ உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.
அமெரிக்கர்களைக் கொன்றவர் முன்னாள் ராணுவ வீரர்
சிரியாவில் இரு அமெரிக்க வீரர்கள் மற்றும் மொழிப்பெயர்ப்பாளர் என மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொலை செய்தவர் முன்னாள் ராணுவ வீரர் எனவும் அவர் பணிநீக்கம் செய்யப்படவிருந்த நபர் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அத் தாக்குதல் நடைபெற்றுள்ளது என சிரிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத் தாக்குதலுக்குப் பிறகு சிரியாவின் 11 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
