world

img

தீக்கதிர் உலக செய்திகள்

செங்கடல் தாக்குதல் குறித்து  பேச்சுவார்த்தை: சீனா அழைப்பு 

செங்கடல் பகுதியில் பதற்றங்களைத் தணிக்க சீனா அழைப்பு விடுத்துள்ளது. ஏமனில் மோசமடைந்து வரும் நெருக்கடியைச் சமாளிக்க மனிதாபிமான உதவிகளை அதிகரிக்கவும், அந்நாட்டுடன் அரசியல் ரீதியிலான உரையாடலை மீண்டும் துவங்கவும் ஐ.நா அவைக்கான சீனாவின் துணை நிரந்தர பிரதிநிதி சன் லீ அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். செங்கடல் பகுதியில் நிலையற்ற கப்பல் போக்குவரத்து பொருளாதார நெருக்கடியை தீர்க்க உதவாது என கூறப்பட்டுள்ளது.

“குழந்தைகளை படுகொலை செய்ய  அமெரிக்கா பணம் கொடுக்கிறது”

“காசாவில் குழந்தைகளைப் படுகொலை செய்ய அமெரிக்க நாடாளுமன்றம் குண்டுகளுக்கு பணம் கொடுக்கின்றது” என அமெரிக்க செனட்டில் கோஷமிட்ட பென் & ஜெர் என்ற ஐஸ்கிரீம் நிறுவனத்தின் இணை நிறு வனரும் சமூக ஆர்வலருமான பென் கோஹன் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டுள்ளார்.  மேலும் பட்டினியால் இறந்து கொண்டிருக்கும் பாலஸ்தீன குழந்தைகளுக்கு உணவை கொடுக்கவிடாமல் தடுத்து வரும் இஸ்ரேலுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

காசாவில் இஸ்ரேல் ராணுவம் கொடூரத் தாக்குதல்

காசாவில் அகதிகள் முகாம், மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் இஸ்ரேல் கொடூரமான முறையில் போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசி தாக்குதலை நடத்தி உள்ளது. இந்தத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 84 பேர் படுகொலையாகியுள்ளனர். ஹமாஸ் வசம் இருந்த கடைசி அமெரிக்க பணையக் கைதி விடுவிக்கப்பட்ட ஒரு நாளில் இத்தகைய கொடூரமான தாக்குதலை இஸ்ரேல் அரங்கேற்றியுள்ளது. மேலும் தாக்குதல் இன்னும் தீவிரமாகும் என நேதன்யாகு குறிப்பிட்டுள்ளார். 

டிரம்ப் - அம்பானி சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பை முகேஷ் அம்பானி சந்தித்துள்ளார். கத்தார் உள்ளிட்ட மூன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு டிரம்ப் அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். கத்தாரில்  நடைபெற்ற அரசு விருந்தில் கலந்து கொண்ட அம்பானி அங்கு டிரம்பை சந்தித்துப் பேசியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகு டிரம்புடன் இரண்டாவது முறையாக அம்பானி சந்தித்துள்ளார். எனினும் சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

மியான்மரில் நிலநடுக்கம்

மியான்மர் நாட்டில் இரண்டு முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் எவ்விதமான பெரும் சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சில இடங்களில் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மியான்மர் நாட்டில் நள்ளிரவு 12.41 மணிக்கும் அதிகாலை 5.46 மணிக்கும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.