world

img

பலுச்சிஸ்தான் பிரிவினைவாதக் குழு தாக்குதலை தீவிரப்படுத்துகிறது

பலுச்சிஸ்தான் பிரிவினைவாதக் குழு தாக்குதலை தீவிரப்படுத்துகிறது

இஸ்லாமாபாத்,மே 15- பலுச்சிஸ்தானில் பிரிவினைவாதக் குழு பாகிஸ்தான் அரசுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.  பாகிஸ்தானில் உள்ள பலுச்சிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்கக் கோரி பலுச்சிஸ்தானில் பிரிவினை வாதக் குழு பல ஆண்டு காலமாக பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய போராட்டம் நடத்தி வருகிறது.  தற்போது இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே மோதல் ஏற்பட்டு அமைதி உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ‘ஆபரேஷன் ஹெரோஃப் 2.0’ என்று புதிய ஆயுத தாக்குதலை துவங்கியுள்ளது.  இதன்படி, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மற்றும் பாதுகாப்பு உள்கட்டமைப்புகள் என சுமார் 58 இடங்களில் 78 முறை தாக்குதல்களை நடத்தியுள்ளது.   இந்நிலையில் பலுச்சிஸ்தான் மாகாணத்தில் நிலைமை மிக மோசமாக மாறியுள்ளது.இந்த தாக்குதல் முழு கிளர்ச்சியாகக் கூட மாறலாம் என அச்சம் தெரிவிக்கப் பட்டுள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் வணிகப் பயன்பாட்டு வாகனங்கள் அதிகம் பயணிக்கும் மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலையை பிரிவினைவாதக்குழு கைப்பற்றியது. மேலும் பலுச்சிஸ்தான் பகுதியில் இருந்து இயற்கை வளங்கள் எடுத்து செல்லப்படும் வாகனங்களை சிறைப்பிடிக்கும் நோக்கில் வாகன பரிசோதனை நடத்தியுள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தின் உளவுத்துறை அதிகாரிகள் 4 பேரை கொன்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.  மேலும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவும் சர்வதேச நாடுகளும் உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரிவினைவாதக்குழு வலியுறுத்தியுள்ளது.  பாகிஸ்தானில் இருந்து வரும் அமைதி, போர் நிறுத்தம் மற்றும் சகோதரத்துவம் பற்றிய ஒவ்வொரு பேச்சும் வெறும் ஏமாற்று வேலை எனவும் அது போர்த் தந்திரம் எனவும் தற்காலிக சூழ்ச்சி என்றும் விமர்சித்துள்ளது. மேலும் பாகிஸ்தானை உலகளாவிய பயங்கரவாதி களின் “வளர்ப்பு நிலம்” என்று முத்திரை குத்துவதுடன், அதை ஒரு பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது. அதே நேரத்தில் தங்கள் அமைப்பு வெளிநாடுகளில் இருந்து உதவி பெற்று வருவதாக கூறப்படுவதை நிராகரித்துள்ளது.