உதகை 127-ஆவது மலர்க்காட்சி
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
உதகை, மே 15 - உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 127-ஆவது மலர்க்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து, 24 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட பெரணி இல்லத்தை திறந்து வைத்தார். கோடைக்காலத்தில் நீலகிரியின் அழகினை கண்டுகளிக்க வரும் லட்சக் கணக்கான சுற்றுலாப் பயணிகளை உற்சாகப் படுத்தும் வகையில் தோட்டக்கலைத் துறை சார்பில் பல்வேறு கண்காட்சிகள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு 127-ஆவது மலர்க்காட்சி 15.05.2025 முதல் 25.05.2025 வரை நடைபெற உள்ளது. இந்த மலர்க்காட்சியின் சிறப்பம்சமாக (Royal Theme) பண்டைய தமிழ் அரசர் களின் வாழ்வியல் முறைகளை வெளிக் காட்டும் வகையிலும், சிறுவர்களைக் கவரும் வகையிலும் 70 அடி நீளம், 20 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான அரண்மனை நுழைவு வாயில் வடிவமைப்பு 1,30,000 மலர் களால் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. மேலும், 75 அடி நீளம், 25 அடி உயரத்தில் கார்னேசன், ரோஜா, சாமந்தி போன்ற 2,00,000 மலர்களால் ஆன (Royal Castle) பண்டைய அரசர் கால அரண்மனை அமைப்பும் மிக பிரம்மாண்டமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 8 அடி உயரம் 35 அடி நீளம் கொண்ட அன்னபட்சி 50,400 சாமந்தி மலர்களைக் கொண்டு அமைக்கப் பட்டுள்ளது. 4,000 மலர்த்தொட்டிகள் மற்றும் 35,000 சாமந்தி, ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கல்லணை மலர்களால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பூங்காவின் பல்வேறு பகுதிகளில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பண்டைய கால சிம்மாசனம், ஊஞ்சல், கண்ணாடி, இசைக் கருவிகள், பீரங்கி, யானை, புலி, சதுரங்க அமைப்பு போன்ற மலர் அலங்கார வடிவமைப்புகளும் இவ்வாண்டு மலர்க்காட்சியில் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உதகமண்டலம், அரசு தாவரவியல் பூங்காவில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள 127-ஆவது மலர்க்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழ னன்று தொடங்கி வைத்தார். பின்னர் யானை மலர் வடிவ அமைப்பு, அரண்மனை அலங்கார வடிவமைப்பு, சிம்மாசனம் மலர் வடிவமைப்பு, மலர்க்காட்சி திடல், அன்னப்பட்சி மலர் வடிவமைப்பு, கண்ணாடி மாளிகை, கல்லணை மலர் வடிவமைப்பு ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர், தோட்டக்கலைத் துறை, வேளாண்மைத் துறை, சுற்றுலாத்துறை, வனத்துறை, பழங்குடியினர் நலத்துறை, மகளிர் சுயஉதவிக் குழு, நீலகிரி பார்வையற்றோர் நலச்சங்கம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். பழங்குடியின மக்களின் நடனம், பரதநாட்டியம், திபெத்தியர்களின் நடனம் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், அரசு தலைமைக் கொறடா கா. ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, சட்டமன்ற உறுப்பினர் ஆர். கணேஷ், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை செயலாளர் வ. தட்சிணாமூர்த்தி, வேளாண்மைத் துறை இயக்குநர் பா. முருகேஷ், தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பெ. குமாரவேல் பாண்டியன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.