செய்யூர் காவல் நிலையத்தின் தொடரும் மெத்தன அணுகுமுறை
செங்கல்பட்டு, ஜூலை 11- செய்யூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டிய காவல் நிலைய அதிகாரிகள் தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்படுவதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குற்றம் சாற்றியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில செயலாளர் வா.பிரமிளா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், நயினார் குப்பம் கிராமத்தில் 26 வயதான இளம்பெண் சசிகலா ஜூன் 24 அன்று மர்மமான முறையில் இறந்தார். காவல்துறையும் இது சந்தேக மரணம் என்ற அடிப்படையில் முதலில் பிரிவு 174ன் கீழ் வழக்குப் பதிவு செய்தது. பின்னர் சட்டப்பிரிவு 306ஆக மாற்றி, குற்றவாளி புருஷோத்தமன் என்பவரைக் கைது செய்துள்ளது.
கடந்த சில வருடங்களாக சசிகலாவை, அவருடைய உறவினர்களான புருஷோத்தமன் மற்றும் தேவேந்திரன் ஆகியோர் ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டி பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. ஜூன் 24 அன்று சசிகலா வீட்டில் தனியாக இருந்தபோது, அங்குச் சென்று புருஷோத்தமன் “உனக்கு எப்படி திருமணம் ஆகிறது என்று நான் பார்க்கிறேன்” என்று கூறி சண்டை போட்டுள்ளார். சிறிது நேரத்தில் சசிகலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகப் புருஷோத்தமன் நாடகமாடினார். இது எதுவும் புரியாமல் சசிகலாவின் பெற்றோர் இருந்துள்ளனர். சசிகலாவுடன் பணி செய்திடும் தோழிகளை விசாரித்த பிறகுதான், தனது மகளின் மரணத்தில் சந்திராவுக்கு சந்தேகம் வந்துள்ளது. சசிகலாவிற்கு அண்ணன் முறை உறவினர்களான புருஷோத்தமன் மற்றும் அவனது சகோதரன் தேவேந்திரனும் பல ஆண்டுகளாக சசிகலாவை பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சசிகலாவின் தாயார் காவல்துறையில் மீண்டும் 26 ஆம் தேதி இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் குற்றவாளிகள் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.
ஜூலை 5ஆம் தேதி புருஷோத்தமன் காவல்துறையிடம் சரணடைந்து விட்டார். ஆனால் தலைமறைவாக உள்ள தேவேந்திரனை போலீஸ் தேடி வருவதாகக் கூறுகிறது. ஆனால் தேவேந்திரன் அவரது ஊரில் சுதந்திரமாக சுற்றிதிரிவாதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளி தேவேந்திரனைக் காப்பற்ற காவல் துறை தொடர்ந்து முயற்சித்து வருவதாக தெரிகிறது. இதேபோன்று செய்யூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட தழுதாளி குப்பம் கிராமத்தில் அழகு நிலையம் வைத்துள்ளவர் ஸ்ரீதேவிமுருகன். இவரது மைனர் மகளுக்கு, நெருங்கிய உறவினரான மணிகண்டன் இணையதளம் வழியாக பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். 5 வருடத்திற்கு முன்பாக ஶ்ரீதேவிமுருகனின் மைனர் மகளுடன் எடுத்த புகைப்படத்தை, அனுமதியின்றி இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இதனால், மணிகண்டனின் நண்பர்கள் இரவு நேரங்களில் தொலைபேசி மூலம் தாய்-மகள் இருவரிடமும் ஆபாசமாகப் பேசியுள்ளார். இதுகுறித்து ஸ்ரீதேவி, மணிகண்டன் மற்றும் அவர்து நண்பர்கள் மீது செய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் மணிகண்டன் மீது மட்டும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். தற்போது மணிகண்டன் ஜாமீனில் வெளியேவந்துள்ளார். மணிகண்டனின் நண்பர்கள் முகநூல் பக்கம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கவில்லை. செங்கல்பட்டு மாவட்டத்தின் கடைக்கோடியாக உள்ள செய்யூர் பகுதியில் பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காவல்துறை அதிகாரிகள் இத்தகைய புகார்களின் மீது போதிய கவனம் செலுத்துவதில்லை. இது குற்றவாளிகளுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தி தருகிறது. குற்றங்கள் அதிகரிக்கவும், குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடவும் உதவி செய்கிறது.
ஒரு வருடத்திற்கு முன்பு பெண்களை நிர்வாணப்படுத்தி பூஜை என்ற பெயரில் பாலியல் கொடுமை செய்து வந்த ஸ்ரீதர் சாமியார் மீது பல முறை மாவட்ட காவல் துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அவரை கைது செய்யவில்லை. சாமியார் தொடர்ந்து பூஜைகள் செய்வது செய்யூர் காவல்நிலைய அதிகாரிகளுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. லஞ்ச லாவண்யம், மதுவிற்பனை என அனைத்து சட்ட மீறல்களும் அப்பகுதியில் கண்டும் காணாமல் நடப்பதாகவும் கூறப்படுகிறது. பெண்களையும் பெண் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டியது அரசு மற்றும் காவல்துறையின் கடமை. ஆனால், காவல்துறையின் அணுகுமுறையும், மெத்தனப் போக்கும் பாதிக்கப்பட்டுக் காவல் நிலையத்தை நாடுபவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருகிறது. இந்த அணுகுமுறை மாற வேண்டும். வன்முறை பிரச்சனைகளில் வழக்கைப் பதிவு செய்வதோடு நின்று விடாமல், குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர வேண்டும். அதுதான் சமூகத்தில் குற்றங்கள் குறைவதற்கான வழியாக இருக்க முடியும். ஆதலால் புகார்கள், வழக்குகள் மீது விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.