தவறான பொருளாதாரக் கொள்கைகளால் அத்துக் கூலிகளாக்கப்படும் இளைஞர்கள்
ஓசூர், அக். 13- தவறான பொருளாதாரக் கொள்கை களால் இந்திய இளைஞர்கள் அத்துக் கூலி களாக்கப்படுகிறார்கள் என்று இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் ரஹீம் எம்.பி. கூறினார். சங்கத்தின் தமிழ்நாடு மாநில 18-ஆவது மாநாட்டின் துவக்கமாக ஓசூரில் ஞாயிற்றுக் கிழமை (அக்.12) நடைபெற்ற மாபெரும் பேர ணியின் நிறைவாக பெரியார் சதுக்கம் நூறடி சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், தற்போது தமிழகத்தைப் பிடிக்க வேண்டும் என்ற வெறியுடன் ஆர்.எஸ்.எஸ்., பாஜக திட்டம் தீட்டிச் செயல்படுகிறது. இங்கு கூடியிருப்பவர்கள் நடிகர்களின் ரசிகர்கள் அல்ல, அரசியலற்றவர்களும் அல்ல. மக்களை நேசிக்கும் கொள்கை கொண்ட, அரசியல்மயமாக்கப்பட்ட ஆயிரக் கணக்கான வாலிபர் சங்கத்தினர். மத வெறியர்களின் சதித்திட்டங்களை முறி யடிக்கக்கூடிய சக்திமிக்கவர்கள் என்றார். மேலும், “1925 முதல் 1947 வரை நடை பெற்ற சுதந்திரப் போராட்டத்தில் எள்ளளவும் ஈடுபடாத சங் பரிவாரங்கள்தான் இன்று நாட்டை ஆள்கிறார்கள். இந்த ஆட்சியில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் கொல்லப் படுகிறார்கள். பாஜக, பாபர் மசூதியை இடிப்பதை மட்டுமே அரசியல் மூலதனமாக்கி ஆட்சியைப் பிடித்துள்ளது” என்றும் சாடினார். பாஜகவின் ஆட்சியில் தொழிலாளர் களுக்கு உரிமைகள் இல்லை என்றும், நவ தாராளமயக் கொள்கையால் படித்த இளை ஞர்கள் இன்சூரன்ஸ், பி.எஃப். உள்ளிட்ட எந்த அடிப்படை உரிமைகளும் இல்லாத கிக் (செயலி வழி) தொழிலாளர்களாக உள்ள னர். ஸ்விகி, உபர், ஜோமேட்டோ போன்ற ஆன்லைன் உணவு விநியோகத் துறையில் சேர்ந்து உணவு விநியோகம் செய்கின்றனர். மக்களுக்கு அடிப்படைத் தேவையான வீடுகூட இல்லாமல் பலர் உள்ளனர். இந்தியாவில் வறுமையை ஒழித்த ஒரே மாநிலம், இடதுசாரிகள் ஆளும் கேரளம்தான். அங்கு இதுவரை ஐந்து லட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைப் பற்றிச் சிந்திக்கவிடாமல், சமூகத்தில் போதை கலாச்சாரம் திட்டமிட்டு பரப்பப்படுவதாகவும் அதற்கெதிராக வாலிபர் சங்கம் கையெழுத்து இயக்கம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருவதாகவும் ரஹீம் தெரிவித்தார். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மக்க ளுக்காகவும் போராடும் வாலிபர் சங்கம், சமூகத்தில் நிலவும் சாதியக் கொடுமை களுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங் களை முன்னெடுத்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த மாநாட்டில் சாதி ஒழிப்பு, இளைஞர்களை அரசியல்மயப் படுத்துவது, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் விவாதிக்கப்படும் என்றும் ரஹீம் தெரிவித்தார். ஆர். சச்சிதானந்தம் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் பேசுகையில், 1925-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்டது. அதன் நூற்றாண்டு விழாவில் மோடி நூறு ரூபாய் நாணயம் வெளியிட்டார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காத கூட்டம்தான் ஆர்.எஸ்.எஸ். தற்போது வரலாற்றிலும், பாடப் புத்தகத்திலும் அவர்களுக்கு ஆதரவாக திரித்து எழுதுகின்றனர். வேலையில்லாத் திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. கடந்த முறை ஆட்சிக்கு வந்த பாஜக 2 கோடிப் பேருக்கு வேலை தருவதாக வாக்கு றுதி அளித்தது. ஆனால் தனியார் நிறுவனங்களில் அப்ரெண்டிஸ் வேலை மட்டுமே கிடைக்கிறது என்றார். “உழைப்பு சுரண்டப்படுகிறது. விமானத் துறை முழுவதும் தனியார்மயமாக்கப்பட்டு விட்டது. மத்திய அரசுத் துறைகளில் 10 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு மோடி அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. ஆனால் தீவிரவாதத்தை ஒழித்துவிட்டதாகக் கூறு கின்றனர். வேலையின்மை அதிகரித்தால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது. தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள், தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் ஒன்றிய அரசின் நிதி மற்றும் கல்விக்கான நிதியை ஏன் வழங்கவில்லை என்று போராடுவதில்லை” என்றும் அவர் குற்றம்சாட்டினார். கொரோனா காலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இரத்ததானம் செய்த னர். கொரோனா பாதித்தவர்களுக்குப் பல் வேறு உதவிகளைச் செய்தனர். மக்களுக் காகச் சேவையாற்றும் அமைப்பு வாலிபர் சங்கம். மக்களுக்காகவும், இளைஞர்களின் நலனுக்காகவும் போராடுகின்ற ஒரே அமைப்பு வாலிபர் சங்கம் என அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். ஏ.வி.சிங்காரவேலன் சங்கத்தின் மாநில செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன் பேசுகையில், மக்கள் நல னுக்காகவும் தேச நலனுக்காகவும் போராடு கின்ற மகத்தான இயக்கம் இந்திய வாலிபர் சங்கம். மாவீரன் பகத்சிங் தொடங்கி ஆதித்த வர்த்தன ஸ்ரீ வரை லட்சோப லட்சம் இளை ஞர்கள் தேச விடுதலைக்காகப் போராடி உயிர் நீத்துள்ளனர். தேசத்தில் கல்வி, வேலை வாய்ப்பு, பெண்கள் உரிமை, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் நலனுக்காக வாலிபர் சங்கம் போராடுகிறது. தமிழக வரலாற்றில் வாலிபர் சங்கத்தின் போராட்டம் மகத்தானது. போதைப் பொரு ளுக்கு எதிரான இயக்கம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்த சமூக விரோதிகளுக்கு எதிரான போராட்டம், சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான போரா ட்டம், வளங்களைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எதிரான போராட்டம் என பல போராட்டங்களை வாலிபர் சங்கம் வெற்றிகரமாக நடத்தியுள்ளது. வேலைவாய்ப்பு, கல்வி உரிமை பெற்றுத் தருகிற வகையில் வாலிபர் சங்க மாநில மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன என்றார். எஸ்.கார்த்திக் பொதுக்கூட்டத்திற்குத் தலைமை வகித்து மாநில தலைவர் எஸ். கார்த்திக் பேசுகையில், அரசியல் மாற்றத்திற்காகவும், சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்கவும் போராடுகிற ஒரே வாலிபர் அமைப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் என்றார். சங்கம் தொடங்கப் பட்டது முதல் எல்லோருக்கும் கல்வி கேட்டு, வேலை கேட்டுப் போராடி வரும் அமைப்பு வாலிபர் சங்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டி னார். முன்னதாக மாவட்டச் செயலாளர் கே.இளவரசன் வரவேற்றார். வாலிபர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ்.பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் டி. ரவீந்திரன், செ. முத்து கண்ணன், மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, வாலிபர் சங்கத்தின் மத்தியச் செயற்குழு உறுப்பினர் ஜெய்க் சி. தாமஸ், மாநிலத் துணைச் செயலாளர்கள் செல்வராஜ், டி. சந்துரு, மத்தியக் குழு உறுப்பினர் எம். பிரியங்கா ஆகியோர் பேசினர். மாவட்டத் தலைவர் ஆர்.நஞ்சா ரெட்டி நன்றி தெரிவித்தார்.
