tamilnadu

img

மறுமலர்ச்சி இயக்கத்தின் முன்னோடி அய்யா வைகுண்டருக்கு மணிமண்டபம்

மறுமலர்ச்சி இயக்கத்தின் முன்னோடி  அய்யா வைகுண்டருக்கு மணிமண்டபம் திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் அடிக்கல் நாட்டினார்!

திருவனந்தபுரம், மார்ச் 2- “வரலாற்றைத் திரித்துக் கூறி, கடந்த கால ஒடுக்குமுறைகளை மறைக்க முயற்சிப்போருக்கு அய்யா வைகுண்டரின் வாழ்வும் சிந்தனைகளுமே மிகச்சிறந்த பதில்” என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பெருமிதத்துடன் தெரிவித்தார். கேரள மாநிலத் தலைநகர் திரு வனந்தபுரத்தின் மையப் பகுதி யில், சமூக மறுமலர்ச்சி இயக்கத் தின் பிதாமகர் அய்யா வைகுண்ட சுவாமி நினைவாக ரூ. 3.50 கோடி  மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டு வதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்துகொண்டு நினைவகத்திற்கான அடிக்கல்லை நாட்டிச் சிறப்புரையாற்றினார். வரலாற்றுத் திரிபிற்கு எதிரான அறப்போர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஆற்றிய உரையின் விரிவான விபரம்: “நமது சமூக மறுமலர்ச்சிக்குத் தலைமை தாங்கிய மாபெரும் ஆளுமை அய்யா வைகுண்ட சுவாமி. அவரது நினைவாக இந்த மணிமண்டபம் எழுப்பப்படு வதற்குப் பின்னால் மிக முக்கிய மான காரணங்கள் உள்ளன. குறிப்பாக வரலாற்றைத் திரித்துக் கூறும் போக்கு நிலவும் இன்றைய காலகட்டத்தில், அதற்கு எதிரான ஒரு நடவடிக்கையாகவே இந்த நினைவகம் அமையும். இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு கேரளம் எப்படி இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள வைகுண்டரின் வாழ்க்கையை முன்னிறுத்த வேண்டியது அவசியம். அந்தக் காலம் பொற்காலமாக இருந்தது என இன்று சிலர் வக்கா லத்து வாங்குகிறார்கள். ஆனால், அன்று நிலவிய தீண்டாமையையும் ஒடுக்குமுறையையும் மறைக்க முயலும் சக்திகளுக்கு எதிராகச் சாட்சியமாக இந்த மணிமண்டபம் விளங்கும். தீண்டத்தகாதவர் கண்ணில் பட்டால் கேடு விளையும் எனக் கருதப்பட்ட அந்த இருண்ட காலத்திற்குச் சமூகத்தைத் திரும்ப அழைத்துச் செல்லச் சிலர் முயற்சிக்கிறார்கள். அந்தப் பிற் போக்குத்தனத்தை எதிர்கொள்ளும் ஆற்றல் அய்யா வைகுண்டர் ஏற்றி வைத்த சமத்துவ ஒளிக்கு மட்டுமே உண்டு.” மறுமலர்ச்சித் தலைவர்களின் வழிகாட்டி தொடர்ந்து பேசிய முதலமைச் சர், “காலத்தை வென்ற சிந்தனை யாளர் அய்யா வைகுண்டர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கேரளாவிற்கு வந்த சுவாமி விவேகானந்தர், இங்கிருந்த அவலங்களைக் கண்டு ‘பைத்தியக் காரர்களின் கூடாரம்’ என்றார்.  அதற்கு முந்தைய நூற்றாண்டு களில் நிலைமை இன்னும் மோச மாக இருந்தது. அந்தச் சூழ்நிலை யில் அநீதிகளுக்கு எதிராக ‘சமத் துவ சமாஜத்தை’ நிறுவி,  மன்னராட்சிக்கும் நிலப்பிரபுத்துவத் திற்கும் எதிராகப் போராடியவர் அய்யா வைகுண்டர். மக்களை ஒன்றிணைக்க அவர்  கையாண்ட ‘சமபந்தி போஜனம்’ புரட்சிகரமானது. மேலாடை அணி யும் உரிமைக்காகவும், தலைப் பாகை அணியும் உரிமைக்காகவும் அவர் போராடினார். மனிதர்களில் இறைவன் இருப்பதை உணர்த்தக் கண்ணாடியை நோக்கி வணங்கச் செய்தார். ஸ்ரீ நாராயண குரு கண் ணாடி வழிபாட்டைக் கூறுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே இதனைச் செயல்படுத்தியவர் அவர். அன்றைய ‘ஊழியம்’ எனும்  கூலியில்லா வேலை முறைக்கு எதிராகத் தொழிலாளர் உரிமையை நிலைநாட்டியவர். அய்யன்காளி, நாராயணகுரு, சட்டம்பி சுவாமிகள் போன்ற பின்னாளைய மறு மலர்ச்சித் தலைவர்களுக்கு அய்யா வைகுண்டரே ஆதி முன்னோ டியாகத் திகழ்ந்தார்” எனப் புகழாரம் சூட்டினார். சிறப்பு மரியாதை முன்னதாக, அய்யா வைகுண்ட ருக்கு மணிமண்டபம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த முதலமைச்ச ருக்குத் தமிழக - கேரள மக்கள் சார்பில் சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதி பால பிரஜாபதி அடிகளார் தலைமையில் நினைவுப் பரிசு வழங்கி நன்றி தெரி விக்கப்பட்டது. சிவகாசி தொழிலதி பர் அதிபன் போஸ், மதுரை தொழி லதிபர் தென்னவன், குளச்சல் டாக்டர் பிரேம்குமார், கொடுங்குளம் ராஜேந்திரன், புளியங்குடி செல்வ  பிரகாஷ், டாக்டர் ஆர்.தர்ம ரஜினி, கேரளா தர்மமணி, வினோத், கோமதி ஆகியோர் முதலமைச்ச ருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினர். இவ்விழாவிற்கு கலாச்சாரத் துறை அமைச்சர் சஜி செரியன் தலை மை வகிக்க, கல்வி அமைச்சர் வி. சிவன் குட்டி முன்னிலை வகித்தார். நிதி அமைச்சர் கே.என்.பால கோபால் உரையாற்றினார். கேரள கைவினைப் பொருள் மேம்பாட்டுக் கழகத் தலைவர் ராமபத்திரன் அனை வரையும் வரவேற்றார். கலாச்சாரத் துறை இயக்குநர் திவ்யா எஸ் ஐயர் நன்றி கூறினார். சட்டமன்ற உறுப்பினர்கள் வி.கே.பிரசாந்த், ஜாய், அன்சலன், வின்சன்ட் ஸ்டீபன், சிபிஎம் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி னர் ஏ.வி.பெல்லார்மின் உள்ளிட்ட ஏராளமானோர் இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் கலந்து கொண்டனர்.