பட்டியலின தூய்மை பணியாளர்களை அலைகழிப்பதாக வாலிபர் சங்கம் குற்றச்சாட்டு
விழுப்புரம், செப்.16- விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பட்டிய லின தூய்மை பணியாளர்களை பணி நிமித்தமாக அலைகழிப்பதாக குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியரிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர். வாலிபர் சங்கத்தின் வட்டச் செயலாளர் மதன்ராஜ் தலைமையில் மாவட்டத் தலைவர் எஸ்.பிரகாஷ் உள்ளிட்டோர் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில், செப். 14 அன்று கோலியனூர் ஊராட்சி பகுதியில் விளையாட்டு மைதானம் சம்பந்தமாக ஆய்வு செய்த போது கோலியனூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அங்கு பணிபுரியும் பட்டியலின தூய்மை பணியாளர்களிடம் சாதியக் கண்ணோட்டத்தோடு செயல்பட்டு வருவது தெரியவந்தது. மேலும் விசாரிக்கையில் கோலியனூர் பகுதியில் சுமார் பத்து தூய்மைப் பணி யாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருவதாகவும் அதில் 7 தூய்மை பணியாளர்கள் வன்னியர் வகுப்பைச் சார்ந்தவர்கள் என்றும், 3 தூய்மை பணியாளர்கள் (எஸ்5) பட்டிய லின வகுப்பை சார்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. மேற்படி சமுதாயத்தைச் சேர்ந்த 3 தூய்மை பணியாளர்களையும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அலைக்கழிக்கும் விதமாக அருகே குச்சிப்பாளையம், சாலை, தொடர்ந்தனூர் ஆகிய கிராமங்க ளுக்கு தூய்மை பணி செய்ய கட்டாயப்படுத்துவதாகவும் மற்ற தூய்மைப் பணியாளர்களை கோலியனூர் பகுதியில் பணி செய்ய உத்தரவிடுவதாகவும் தெரிய வந்தது. இத்துடன், பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களை நேரில் சென்று விசாரித்தபோது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாதி ரீதியாக பேசி தொடர்ந்து வெவ்வேறு கிராமங்களுக்கு பணி செய்ய வற்புறுத்துவதாகவும் தெரிவித்தனர். இது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்தி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுத்து பட்டியலின தூய்மை பணியாளர்களை கோலியனூரில் பணி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.