உலக அரங்கில் இந்தியாவை கோழை நாடாக்கி விட்டீர்கள்! எங்கள் இதயங்களில் தேசம் இருக்கிறது; உங்கள் இதயங்களில் தேர்தல் மட்டுமே இருக்கிறது
மக்களவையில் மோடி அரசை விளாசிய சு. வெங்கடேசன் எம்.பி.
புதுதில்லி, ஜூலை 29 - ‘ஆபரேசன் சிந்தூர்’ மூலம், உலக அரங்கில் இந்தியாவை ஒரு கோழை நாடாக மோடி அரசு மாற்றியிருப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடுமையாக குற்றம் சாட்டினார். மேலும், தேர்தலைப் பற்றி மட்டுமே மோடி அரசு நினைக்கிறது. தேசத்தைப் பற்றி கவலைப்படுவது இல்லை என்றும் சு. வெங்கடேசன் எம்.பி. சாடினார். பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரே சன் சிந்தூர் பற்றிய சிறப்பு விவாதம், நாடாளு மன்றத்தில் திங்களன்று நடைபெற்றது. இதில் விவாதத்தில் பங்கேற்று சு. வெங்கடேசன் எம்.பி. பேசியதாவது: ஊரி, பாலகோட்... வரிசையில் பஹல்காம் “பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்த விவாதத்தை தொடக்கி வைத்து பேசினார். 2016-ஆம் ஆண்டு ஊரி (Uri) தாக்குதல் நடந்த பொழுது இந்த அரசு என்ன சொன்னதோ, 2019-ஆம் ஆண்டு பாலகோட் தாக்குதல் நடந்த பின்னணியில் இந்த அரசு என்ன சொன்னதோ, அதையேதான் இன்றைக்கு மீண்டும் சொல்லி இருக்கிறது. கடந்த காலங்களில் நீங்கள் எத்தனையோ உத்தரவாதங்களைக் கொடுத்த பிறகும், பஹல்காமில் 26 உயிர்களைப் பறித்த பயங்கர வாதத் தாக்குதல் எப்படி நடந்தது, தாக்குதல் தொடங்கி ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு தான், அங்குள்ள மக்களுக்கு உதவி யோ, அரசாங்கத்திற்கு தகவலோ கிட்டி இருக்கிறது என்றால், அது எவ்வளவு பெரிய வெட்கக்கேடானது? யாரைக் கைகாட்டப் போகிறீர்கள்? இது மூன்றடுக்குப் பாதுகாப்பின் தோல்வி. ராணுவத்தின் தோல்வி. சி.ஆர்.பி.எப்-ன் தோல்வி. ஜம்மு - காஷ்மீர் காவல் துறையினுடைய தோல்வி. இதற்கு யார் பொறுப்பேற்கப் போவது? அதிகாரிகளா, அமைச்சரா? ஒரே தேசம், ஒரே தலைவர் என்று நீங்கள் சொல்லுவீர்களே... அந்தப் பிரதமர் பொறுப்பேற்கப் போகிறாரா? நீங்கள் (பாஜக) ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை, எல்லா நிகழ்வுகளுக்கும் நேருவிலிருந்து, மன்மோ கன் சிங் வரை பொறுப்பேற்க வேண்டும் என் பீர்களே, இப்போது யாரைக் கை காட்டுவீர்கள்? அதிக தோல்வி யாருக்கு உள்துறைக்கா..வெளியுறவுத்துறைக்கா? அதிகம் தோல்வி அடைந்திருப்பது உள்துறையா, வெளியுறவுத்துறையா?! இந்த தாக்குதல் நடந்தபோது, சவூதி அரேபியாவில் இருந்த நம்முடைய பிரதமர், பயணத்திட்டத்தைக் குறைத்துக் கொண்டு நாடு திரும்பினார். நேரடியாக பஹல்காமிற்குச் செல்வார்... காஷ்மீருக்கு செல்வார்... என நாடே எதிர்பார்த்தது. ஆனால், அவர் பீகாரில் தேர்தல் அணிவகுப்பில் கலந்துகொள்ளச் சென்றார். எங்கள் இதயங்களில் தேசம் இருக்கிறது, உங்கள் இதயங்களில் தேர்தல் மட்டும் தான் இருக்கிறது. கோவிலுக்கு வர அஞ்சும் மோடி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென நாங்கள் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ‘இந்த நாடாளு மன்றம் ஜனநாயகத்தின் கோவில்’ என்றார் பிரதமர். சரி, ‘கோவிலுக்கு’ வாருங்கள்.. என நாங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். ஆனால் கோவிலுக்கு வர இவ்வளவு பயப் படும் பிரதமரை இப்போதுதான் பார்க்கிறோம். பீகார் பிரச்சாரத்திற்குத் தான் இவ்வளவு வேகமா? பீகாரில் போய் பிரச்சாரம் செய்த பிரதமர், ‘கற்பனையே செய்ய முடியாத தாக்குதலை நாங்கள் நடத்துவோம்’ என்று பேசினார். நாடே அந்த தாக்குதலை எதிர்பார்த்தது. ஆனால், கற்பனையே செய்ய முடியாத தாக்குதலை நடத்தியது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தான். இந்த விவகாரத்தில் அதிகம் தோல்வி யடைந்திருப்பது, உள்துறை அமைச்சகமா, வெளியுறவுத்துறை அமைச்சகமா, என்ற விவாதத்தை இன்று இந்த அவையில் எதிர்க்கட்சிகள் நடத்திக் கொண்டிருக்கிறோம். தனிமைப்பட்டு நிற்கும் இந்தியா- இந்தியாவை கோழை நாடாக்கியிருக்கிறீர்கள்! சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு கடன் கொடுப்பதை இந்தியாவால் நிறுத்த முடியவில்லை. அதன் நிர்வாகக் குழுவில் 25 நாடுகள் உள்ளன. அதில், ஒன்றுகூட இந்தியாவுக்கு ஆதரவாக வாக்களிக்க வில்லை. சர்வதேச அரங்கில் இந்தியாவை தனிமைப்படுத்தி வைத்திருக்கிறீர்கள்! பாலஸ்தீனப் பிரச்சனையில் ஐ.நா. தீர்மானத்தில் இருந்து விலகியது, ஈரான் தாக்குதல் விவகாரத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில் கையெழுத்துப் போடாதது, டிரம்பின் பேச்சுக்கு எதிராக எந்த எதிர்வினையும் ஆற்றாதது- இவற்றின்மூலம் சர்வதேச அரங்கில் இந்தி யாவை ஒரு கோழை நாடாக கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறீர்கள். குழுவில் பங்குபெற்ற ‘தேசத்துரோகிகள்’ இந்தியாவின் நிலைப்பாட்டை சர்வதேச நாடுகளுக்கு எடுத்துரைக்க எதிர்க்கட்சி யினரின் குழுக்களை அனுப்பினீர்கள். எதிர்க்கட்சிகளெல்லாம் அதில் பங்கெடுத் தார்கள். யாரையெல்லாம் கடந்த காலங்களில் நீங்கள் ‘தேசத் துரோகிகள்’ என்றீர்களோ, அவர்களெல்லாம் தூதுக்குழுவில் பங்கெடுத்தோம். ஏனென்றால், எங்களுக்கு முக்கியம் தேசம் தான். எல்லா குழுவிலும், ஒன்று அல்லது, இரண்டு இஸ்லாமிய எம்.பி.க்கள் பங்கெடுத்தார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு இஸ்லாமிய உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது இந்த விஷயத்தில் தான். அந்த பிரதிநிதித்துவத்தையும் எதிர்க்கட்சியினர்தான் கொடுத்திருக்கிறோம். கதையை முடித்திருப்பான் ராஜராஜ சோழன் நேற்றையதினம் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர், சோழர்களுடைய போர்த் திறனை யும் ‘ஆபரேசன் சிந்தூரை’யும் இணைத்துப் பேசியிருக்கிறார். நான் ஒரு வரலாற்று மாண வனாக, வரலாற்றை அறிந்த எழுத்தாளனாக சொல்கிறேன்... இந்தியாவில் ஒரு பேரரசு; கடல்கடந்த வெற்றிகளைப் பெற்றிருக்கிறது- என்றால், அது ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனின் சோழப் பேரரசு மட்டும் தான். அந்த வெற்றிக்கு என்ன காரணம் தெரியுமா, ராஜராஜனோ, ராஜேந்திர சோழனோ, அவன் தொடங்கிய போரை அவன்தான் முடித்து வைத்தானே தவிர, பக்கத்து நாட்டு மன்னன் வந்து முடித்துவைக்கவில்லை. மோடி தொடங்கிய ‘ஆபரேசன் சிந்தூரை’, தான் முடித்து வைத்ததாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 25 முறை கூறினார். ராஜ ராஜன் துவங்கிய போரை, பக்கத்து நாட்டு மன்னன் முடித்து வைத்ததாக சொல்லி யிருந்தால், முதலில் அவன் கதையை முடித்திருப்பான் ராஜராஜ சோழன். தோல்வியை மறைக்க கடவுளை பயன்படுத்துவதா? பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறினார்... ராமன் எப்படி இலங்கையின் மீது படை யெடுத்து ராவணனைக் கொன்றாரோ, அப்படி மோடி இந்த படையெடுப்பை நடத்தியதாக சொன்னார். இன்னொரு அமைச்சர் எழுந்து, சிசுபாலனின் தலையை வெட்ட சுதர்சன சக்கரத்தை கிருஷ்ணன் பயன்படுத்தியதைப் போல பிரதமர் படைகளைப் பயன்படுத்தினார் என்றார். உங்கள் தோல்விகளை மறைக்க கடவுள்களை இவ்வளவு மலினமாக பயன் படுத்துவது நியாயமா? ஆத்திகவாதிகளின் மனம் புண்படாதா? இந்துக்களின் மனம் புண் படாதா என்பதை வேதனையோடுகேட்கிறோம். சோபியா குரேஷி - அதில் ஷா-வுக்கு அங்கீகாரம் எங்கே? பாதுகாப்புத்துறை அமைச்சர், இங்கே ஆற்றிய உரையில் மறந்துகூட கர்னல் சோபியா குரேஷிக்கு நடந்த அவமதிப்பை, உங்கள் (பாஜக) மத்தியப் பிரதேச எம்.பி விஜய் ஷா அவமரியாதையாக பேசியதைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பஹல்காமில் தாக்குதல் நடந்தபோது சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற தனது உயிரைக் கொடுத்தான் குதிரை ஓட்டியான அதில் ஷா. அந்த அதில் ஷா-வின் வீரத்தைப் பற்றி நீங்கள் ஒருமுறை கூட பேசவில்லை. ஒரு அதில் ஷா இல்லை, ஆயிரம் அதில் ஷா-க்கள் இருக்கிறார்கள், காஷ்மீரில். அந்த காஷ்மீர் மக்களின் ஒருமைப்பாட்டை அங்கீகரித்து ஒருவார்த்தை பேசவில்லை நீங்கள். வேதனையோடு சொல்கிறோம். மத ரீதியான வேறுபாடுகளை பயங்கரவாதத்தை வைத்து அதிகரிக்க முடியாது என்பதுதான் இந்தியா சொல்லும் செய்தி. அந்த இந்தியாவை உங்களால் ஒருபோதும் பிளக்கவோ, பிரிக்கவோ முடியாது என்று சொல்லி முடிக்கிறேன்.” இவ்வாறு சு. வெங்க டேசன் எம்.பி. பேசினார்.