மந்தகதியில் குடிநீர் திட்டப் பணி
விரைந்து முடிக்க மாதவரம் மக்கள் கோரிக்கை
சென்னை, ஜூலை 1- மாதவரத்தில் குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாதவரம் மண்டலம், 26வது வார்டு, பால் பண்ணை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தெருக்களில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டி ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. மாதவரம் பால் பண்ணை அலெக்ஸ் நகர், சி.காலனி, பாரதிதாசன் தெருவில் குடிநீர் குழாய் பதிக்க பள்ளங்களை தோண்டி அதிலிருந்து மணலை எடுத்து தெருக்களில் மலைபோல் குவித்து வைத்துள்ளனர். இந்த பணிகள் மந்தகதியில் நடை பெறுவதால் தெருக்களில் பொதுமக்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். பள்ளி வாகனங்கள், குடிநீர் லாரி, மற்றும் அவசர உதவிக்கான ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வர முடியாத நிலையில் உள்ளது. எனவே, பொதுமக்களில் சிரமத்தை போக்கும் வகையில் குடியிருப்பு பகுதிகளில் குடி நீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணி களை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.