தொட்டியம் முதல் லாலாபேட்டை வரை காவிரி ஆற்றில் தடுப்பணையுடன் கூடிய பாலம் அமைக்க வலியுறுத்தல்
திருச்சிராப்பள்ளி, செப். 23- தமிழ்நாடு விவசாயிகள் சங்க தொட்டியம் வட்ட 12 ஆவது மாநாடு, தொட்டியத்தில் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது. வெங்கடாச்சலம் வரவேற்பு ரையாற்றினார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மத்தியக்குழு உறுப்பினர் சந்திரன் துவக்க உரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் ராமநாதன் சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்டத் தலைவர் முருகேசன் வாழ்த்துரை வழங்கினார். மாநாட்டில் தொட்டியம் முதல், லாலாபேட்டை வரை காவிரி ஆற்றில் தடுப்பணையுடன் கூடிய பாலம் அமைக்க வேண்டும். கூட்டுறவு வங்கியின் மூலம் விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி கடன் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய தலைவராக மு.க.முருகானந்தம், செயலாளராக எல்.சத்தியமூர்த்தி, பொருளாளராக என்.எஸ்.செல்லப்பன், துணைத் தலைவராக வி.தர்மலிங்கம், துணைச் செயலாளராக எம்.அன்னராசு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் நடராஜன் நிறைவுரை ஆற்றினார். தர்மலிங்கம் நன்றி கூறினார்.
