புதுக்கோட்டை காந்தி பூங்காவை போட்டித் தேர்வுக்கான படிப்பகமாக மாற்றுக!
வாலிபர் சங்க மாநகர மாநாடு வலியுறுத்தல்
புதுக்கோட்டை, ஆக 4- புதுக்கோட்டை காந்தி பூங்காவை, போட்டித் தேர்வுக்கான படிப்பகமாக மாற்ற வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுக்கோட்டை மாநகர மாநாடு வலியுறுத்தியுள்ளது. வாலிபர் சங்கத்தின் புதுக்கோட்டை மாநகர 17 ஆவது மாநாடு மாநகர துணைச் செயலாளர் பி.நிதிஷ்குமார் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டை தொடங்கி வைத்து மாவட்டத் தலைவர் எஸ். ஜனார்த்தனன் உரையாற்றினார். வேலை அறிக்கையை செயலாளர் ஆர். தீபக் முன்வைத்தார். முன்னாள் நகரச் செயலாளர் ஆர். சோலையப்பன் வாழ்த்திப் பேசினார். புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து மாவட்டச் செயலாளர் ஆர்.மகாதீர் நிறைவுரையாற்றினார். தலைவராக ஆர்.தீபக், செயலாளராக மு.உதயநிதி, பொருளாளராக எஸ்.ராமு உள்ளிட்ட 9 பேர் கொண்ட மாநகரக்குழு தேர்வு செய்யப்பட்டது. எஸ்.ராமு நன்றி கூறினார். புதுக்கோட்டை காந்தி பூங்காவை போட்டித் தேர்வுக்கான படிப்பகமாக மாற்ற வேண்டும். சிட்கோவில் மூடப்பட்ட கம்பெனிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். மாநகராட்சிக்கு உட்பட்ட அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.