465 மடங்கு உயர்வு எச்-1பி விசா கட்டணத்தை உயர்த்தி இந்தியர்கள் மீது டிரம்ப் நிர்வாகம் கொடூரத் தாக்குதல்; சிபிஎம் கடும் கண்டனம்
வாஷிங்டன், செப். 21 - அமெரிக்காவில் தற்காலிகமாக வேலை பார்க்க வழங்கப்படும் எச்-1பி விசாவின் கட்டணத்தை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 215 டாலரிலிருந்து (ரூ. 18,275) ஒரு லட்சம் டாலராக (ரூ. 85 லட்சம்) 465 மடங்கு உயர்த்தியுள்ளார். இந்த அறி விப்பு செப்டம்பர் 21 அன்று நள்ளி ரவு முதல் அமலுக்கு வந்தது. எச்-1பி விசா என்பது வெளிநாடு களில் உள்ள திறமையான பணி யாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வந்து வேலை வாங்க பயன்படும் நடைமுறையாகும். 1990 முதல் அமெரிக்காவின் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு இந்த விசா முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விசாவை வைத்துக்கொண்டு மூன்று ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தங்க முடியும், அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் வரை கூட நீட்டிக்கலாம். 3.5 லட்சம் இந்தியர்களுக்கு நேரடி பாதிப்பு அமெரிக்காவில் மொத்தம் ஐந்து லட்சத்திற்கும் அதிகமா னோர் எச்-1பி விசா வைத்திருக் கின்றனர். அதில் 71 சதவீதம் அதா வது ஏறத்தாழ 3.5 லட்சத்திற்கும் அதி கமானவர்கள் இந்தியர்கள். இந்த அறிவிப்பால் குழப்பமடைந்த ஏரா ளமான இந்தியர்கள் சனிக்கிழமை அவசர அவசரமாக விமானங்களில் ஏறி அமெரிக்காவுக்கு திரும்பினர். அமேசான், மைக்ரோசாப்ட், ஜே.பி. மோர்கன் சேஸ் போன்ற நிறுவனங் கள் தங்கள் ஊழியர்களுக்கு உட னடியாக அமெரிக்கா திரும்புமாறு அவசர அறிவிப்பு விடுத்தன. இந்த திடீர் பயணத் தேவையால் விமான கட்டணங்களும் கடுமையாக உயர்ந்தன. அமெரிக்க அரசின் விளக்கம் அமெரிக்க அரசு பின்னர் விளக்க மளித்ததில், “இந்த புதிய கட்டண முறை ஒரு முறை மட்டுமே செலுத்தப் பட வேண்டியது. ஏற்கனவே எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் தற்போது வெளிநாட்டில் இருந்தாலும், மீண் டும் அமெரிக்காவுக்குள் நுழைய இந்த கட்டணத்தை செலுத்த தேவையில்லை. செப்டம்பர் 21க்கு முன்னதாக விண்ணப்பித்தவர் களுக்கு இந்த கட்டணம் பொருந் தாது” என்று தெரிவித்தது. எனினும் இந்த விளக்கத்தை மோடி அரசு உடனடியாக பரவலாக அறிவித்திருந்தால், ஆயிரக்கணக் கான இந்தியர்கள் அவசர அவசர மாக அமெரிக்கா சென்றிருக்கமாட் டார்கள். அரசின் அலட்சியத்தால் திரு மணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வு களையும் விடுமுறையையும் கைவிட்டு இந்தியர்கள் திரும்பிச் சென்றனர். இதனிடையே, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவும் வகையில் இந்திய தூதரகம் அவசர தொலைபேசி உதவி எண் +1-202-550-9931 (வாட்ஸ்அப் உள்பட) அறிவித்துள்ளது.
தெளிவற்ற பிரதமர்; குழப்பும் அமைச்சகம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு இந்த நடவடிக்கையை கடுமை யாக கண்டித்துள்ளது. கட்சியின் அறிக்கையில், “டிரம்ப் நிர்வாகத்தின் இந்த தன்னிச்சையான மற்றும் பழி வாங்கும் நடவடிக்கையை கட்சியின் அரசியல் தலைமைக் குழு கடுமையாக கண்டிக்கிறது. எச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கு ரூ. 85 லட்சம் என்ற அதிகப்படியான கட்டணம் விதித்ததன் மூலம் அமெரிக்கா தனது சுயநலமான வர்த்தக நலன்களை மற்ற நாடுகளின் இழப்பில் முன்னிறுத்துவதற்கான கொடூரமான உத்தியைப் பயன்படுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளது. “இந்த நடவடிக்கை ஈரானின் சபஹர் துறைமுக திட்டத்தின் மீது 50 சதவீத வரி விதித்ததையும் மீண்டும் பொருளாதாரத் தடை விதித்ததையும் தொடர்ந்து வந்துள்ளது. இது இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கிய சமயத்தில் இந்தியாவின் மீது அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடன் திட்டமிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். இவை அமெரிக்காவின் நியாயமற்ற வரி தொடர்பான கோரிக்கைகளுக்கு இந்தியாவை பணியச் செய்யும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட கொடுமையான நடவடிக்கைகளாகும்” என்று மேலும் குறிப்பிட்டுள்ளது. “இந்த வலுக்கட்டாயமான தந்திரங்களை எதிர்ப்ப தற்கு பதிலாக பிரதமர் மோடி தன்னம்பிக்கை பற்றிய தெளி வற்ற உரைகளுடன் பதிலளித்துள்ளார். அரசுத் தலைவ ரின் இந்த தப்பிக்கும் அணுகுமுறையும்; இதற்கு இணை யாக வெளியுறவு அமைச்சகத்தின் பரிதாபகரமான பதிலும் நாட்டிற்கு ஏமாற்றமளிக்கிற; அவமானகரமான நிலைப்பாடு ஆகும்” என்றும் கட்சி சாடியுள்ளது. “எச்-1பி விசா வைத்திருப்பவர்களின் நுழைவைக் கட்டுப்படுத்தும் அமெரிக்க அறிவிப்பு ஆயிரக்கணக் கான திறமையான இந்திய வல்லுநர்களை நேரடியாக வும் கடுமையாகவும் பாதிக்கும், அவர்களின் தொழில் வாழ்க்கையை சீர்குலைத்து அவர்களின் குடும்பங் களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.” “இத்தகைய கட்டாய மற்றும் அநீதியான நடவடிக்கைகளுக்கு எதிராக இந்திய அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று சிபிஐ(எம்) கோருகிறது. அமெரிக்க அழுத்தத்திற்கு அடிபணிய மறுத்து இந்திய மக்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க அது தீர்மானமாக செயல்பட வேண்டும்” என்றும், கட்சி வலியுறுத்தியுள்ளது.