tamilnadu

img

காவக் காட்டின் கதை

காவக் காட்டின் கதை

“நாளை எங்கள் நாளே” என நம்பிக்கையை சுமந்து கொண்டு “தண்டகாரண்யம்” திரைக்காவியமாக வெளிவந்துள்ளது. “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு” திரைப்படத்தில் உடல் உழைப்பு தொழிலாளியின் வாழ்வியலின் ஊடாக யுத்தவெறியின் கோரத்தை தோலுரித்து மானுட நேயத்தை வெளிப்படுத்திய இயக்குநர் அதியன் ஆதிரையின் இரண்டாவது திரைப்படம் “தண்டகாரண்யம்”. ஆதிவாசி மக்கள் அவர்தம் வாழ்விடங்களை வளங்களை சூறையாடும் வகையில்  அதிகார வர்க்கம் அதிவேகமாக செயலாற்றிக் கொண்டிருக்கிறது. அதற்கு ஏற்ப ‘கருத்து பிரச்சாரத்தை மக்களின் இசைவோடு’ நுட்பமாக உருவாக்கி செயல்படும் அதிகார வெறியாட்டத்தின் அயோக்கியத் தனத்தை படைப்புத் தளத்தில் அடித்து நொறுக்க முயன்றுள்ளது “தண்டகாரண்யம்”. “நக்சலைட் வேட்டை”, “நக்சலைட் மறுவாழ்வு” இந்த இரண்டு செய்திகளுக்கு பின்னால் உள்ள உண்மையை திரைப்படமாக காட்சிப்படுத்துவதில் தண்டகாரண்யம் வெற்றி பெற்று உள்ளது. மலைவாழ் மக்களின் வாழ்வும் பண்பாடும் உண்மைக்கு மிக நெருக்கமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வியலை வரலாற்றுக் கூருணர்வுடன் எடுத்துப் பேசும் வகையில் வசனங்கள் உரையாடல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அரசியல் அதிகார வர்க்கத்தால், வன காவல் துறையினரால் சொந்த மலை கிராமத்தில் மக்கள் வேட்டையாடப்படுவதும், அதிலிருந்து விடுபட புறப்படும் இளைஞர், வெளியூரில் வனப்பகுதியில் வஞ்சிக்கப்பட்டு வாழ்விழக்கும் குரூரத்தை தைரியமாக தெளிவாக காட்சிப்படுத்த முயன்றுள்ளார் அதியன்.  வேலை தேடி அலையும் இளைஞர்கள் ‌வாழ்க்கையை நாசமாக்கும் விளம்பரங்கள், தனியார் நிறுவனங்களின் வன்முறையை வாய்மூடி வேடிக்கை பார்க்கும் அரசு, பொதுச் சமூகத்தின் மவுனத்தை கேள்வி கேட்கிறது இத்திரைப்படம். ஆதிப் பொதுவுடமை சமூக வாழ்வியலும்,  சுரண்டலை அடித்தளமாக கொண்ட நவீன முதலாளித்துவ சமூகத்தின் போக்குகளின் முரண்பாடுகளை நுட்பமாக காட்சிகளின் வழி தண்டகாரண்யம் கடத்தி உள்ளது. கதைக் களத்திற்கு ஏற்ப  திரைக்கலைஞர்களின் நடிப்பு, பாடல், இசை நுட்பமாக இணைந்துள்ளது.   வன்முறையை வக்கிரங்களை ரசிக்க பழக்கப்படுத்திக் கொண்டிருக்கும் வர்த்தக திரை உலகில்,  அதற்கு மாறாக பேசாப் பொருளை பேசியுள்ள  “தண்டகாரண்யம்”,  இயக்கிய இயக்குநர் அதியன் ஆதிரை, தயாரிப்பாளர் பா. ரஞ்சித் மற்றும் உடன் நின்றவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள். தண்டகாரண்யம் வாழ்வியலை காண்பதும்,   அதுசார்ந்த உரையாடலும் காலத்தின் தேவை.