tamilnadu

img

கோதுமை கொள்முதல் இலக்கை எட்டாமல் மூன்றாம் ஆண்டாக மோடி அரசு தோல்வி!

கோதுமை கொள்முதல் இலக்கை அடையும் முயற்சியில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு முழுத் தோல்வியைச் சந்தித்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளாகவே கோதுமை உற்பத்தி அதன் இலக்கை எட்டவில்லை. 372 லட்சம் மெட்ரிக் டன்  இலக்குக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் அரசாங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கொள்முதல்  நிலையங்கள் 257 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை மட்டுமே 2024-ஆம் ஆண்டு மே 16-ஆம் தேதி வரை கொள்முதல் செய்துள்ளது.  கோதுமை கொள்முதல் இராஜஸ்தானில் மே 10-ஆம் தேதியும், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், இமாச்சலப் பிரதேசம் மற்றும் பீகாரில் மே 15-ஆம் தேதியும் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் கோதுமை கொள்முதல் குறைந்துள்ள நிலையில் ஒன்றிய அரசு கொள்முதலுக்கான காலக்கெடுவை மே 31-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இம் மாத இறுதிக்குள் எங்கள் கொள்முதல் 267-268 லட்சம் மெட்ரிக் டன்னாக  இருக்கும் என்கிறார் இந்திய உணவுக் கழகத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் அசோக் கே.மீனா.  இந்தாண்டு தான் இந்த நிலை என்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவும் இந்திய உணவுக் கழகம் அதன் கொள்முதல் இலக்கை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2022-23-ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு 440 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்தது. ஆனால்  (42 சதவீதம்) 187 லட்சம் மெட்ரிக் டன்னே கொள்முதல் செய்தது. 2023-24 ஆம் ஆண்டில், 341 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்தது, ஆனால் 262 லட்சம் மெட்ரிக் டன்  மட்டுமே கொள்முதல் செய்ய முடிந்தது. அதே நேரத்தில் 80 கோடி மக்களுக்கு இலவச தானியங்களை வழங்க, தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் 184 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை தேவைப்படுகிறது. மே 20 ஆம் தேதி வரை கோதுமை கொள்முதலில் பஞ்சாப் (123.4 லட்சம் மெட்ரிக் டன்) முதலிடத்திலும், ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசம் (தலா 80 லட்சம் மெட்ரிக் டன்) இரண்டாவது இடத்திலும் உள்ளன. கடந்த ஆண்டு (2023-2024), உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து இரண்டு லட்சம் மெட்ரிக் டன் கூட (1.96 லட்சம்) கொள்முதல் செய்யப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு, 60 லட்சம் மெட்ரிக் டன்களை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இது 30 மடங்கு அதிகமாகும். ஆனால், இதுவரை (2024-2025) உத்தரப்பிரதேசம் 8.6 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை மட்டுமே வழங்கியுள்ளது.  மே  31-ஆம் தேதி கொள்முதலுக்கான நிறைவு நாள் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இலக்கான 60 லட்சம் டன்னை எட்டுவதற்கு வாய்ப்பு துளியும் இல்லை. தற்போது ஒன்றிய அரசு குவிண்டாலுக்கு வெறும் ரூ.2275 தான் வழங்குகிறது. அதனுடன் இராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச அரசுகள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.125 கூடுதலாக வழங்குகின்றன.

;