tamilnadu

img

தீபாவளிக்கு முன் பணப்பயன்களை வழங்கும் அறிவிப்பே தொழிலாளர்க்கு மகிழ்ச்சி அளிக்கும்!

தீபாவளிக்கு முன் பணப்பயன்களை வழங்கும் அறிவிப்பே தொழிலாளர்க்கு மகிழ்ச்சி அளிக்கும்

போக்குவரத்துத் துறை அமைச்சர் பேட்டிக்கு 
அ. சவுந்தரராசன் பதில்

சென்னை, செப். 12 - போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் 26 நாட்களாக தொடரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகளை தீபாவளிக்கு முன்பாக அரசு நிறைவேற்றும் என்பது தான், போக்குவரத்துத் துறை  அமைச்சரின் நம்பிக்கையளிக்கும் அறிவிப்பாக இருக்கும் என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் அ. சவுந்தரராசன் மேலும் கூறியிருப்பதாவது:  தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத் (சிஐடியு)தொழிலாளர்களும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களும் இணைந்து கடந்த 26 நாட்களாக தமிழகம் முழுவதும் 22 இடங்களில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் கோரிக்கை ஊதிய உயர்வோ அல்லது இதர ஏதேனும் புது சலுகைகள் பற்றியதோ அல்ல. தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய  ஒப்பந்த நிலுவைத் தொகையை இழுத்தடிக்காமல் வழங்க வேண்டும் என்பது ஒரு கோரிக்கை. ஓய்வு பெற்ற தொழிலாளியின் 30 ஆண்டுக்கும் மேலான  சேமிப்புகளையும், ஓய்வுக்காலப் பணப் பயன்களை யும் வழங்காமல் 24 மாதங்களுக்கு மேலாக இழுத்த டிப்பதை கைவிட்டு தீபாவளிக்கு முன்பாகவாவது வழங்க வேண்டும் என்பது ஒரு கோரிக்கை. 2003-க்கு பிறகு வேலையில் சேர்ந்தவர்களுக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிப் படியும், சட்டப்படி செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்த அடிப்படையிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்  என்பது ஒரு கோரிக்கை. ஓய்வு  பெற்றவர்களின் ஓய்வூதியத்திற்கான பஞ்சப் படியை ஒன்பது ஆண்டு களாக வழங்காமல் பெரும் அநீதி  இழைக்கப்படுகிறது; பல நீதிமன்றங்களில் அரசு போக்குவரத்து நிறுவனம் முட்டி மோதிய பிறகும் பஞ்சப்படியை உடனே வழங்குமாறு இறுதித் தீர்ப்பே வந்துவிட்டது;  இப்போதாவது அதை முழுமையாக அமல்படுத்துங்கள்  என்பது ஒரு கோரிக்கை. ஓய்வு பெற்றவர்களுக்கு மருத்துவக் காப்பீடு என்பது இன்னொரு கோரிக்கை.  வாரிசு வேலை போன்றவை நெடுநாள் நிலுவைக் கோரிக்கை. ஆனால், வெள்ளிக்கிழமையன்று பேட்டியளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர், இந்த கோரிக்கை கள் எதற்கும் பதில் அளிக்கவில்லை. இரண்டு ஊதிய  ஒப்பந்தங்களை போட்டோம் என்கிறார்.  அந்த ஒப்பந்தங்கள், பெரும் தாமதத்திற்கு பிறகு  போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் தலா 12 மாத அரியர்சைப் பிடித்துக் கொண்டு விட்டனர். மூன்றாண்டு ஒப்பந்தத்தை நான்காண்டு ஒப்பந்தம் என்று மாற்றி விட்டனர்.  புதிய பேருந்துகள் விட்டோம் என்கிறார். புதிய  பேருந்துகள் விடுவது இந்த துறையில் செய்தாக  வேண்டிய இயல்பான விஷயம். இன்னும் முழுமை யாக பழைய பேருந்துகள் மாற்றப்படவில்லை என்பது  பெரிய உண்மை. உரிய அளவிற்கான புதிய பேருந்து கள் வந்துவிடவும் இல்லை. ஓய்வு பெற்ற தொழி லாளர்களுக்கான பணம் ரூபாய் 1100 கோடி ஒதுக்கப் பட்டதாக அமைச்சர் கூறுகிறார். இது ஆகஸ்ட் 18  காத்திருப்பு போராட்டம் துவங்கிய பிறகு அறிவிக்கப் பட்ட பணம். கொடுக்க வேண்டியதில் இது மூன்றில் ஒரு  பங்கு தான். இப்போதும் ரூபாய் 2000 கோடிக்கு  மேல் பணப் பலன்கள் வழங்கப்பட வேண்டியுள்ளன.  2023 ஆகஸ்ட் மாதம் 22 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூபாய் 45 ஆயிரம். ஓய்வு பெற்றவ ரின் ரூபாய் 40 லட்சம் பணத்தை அப்போதே வழங்கி யிருந்தால் அதைக் கொண்டு 88 பவுன் நகைகள் வாங்கியிருப்பார். அந்தப் பணத்தை 2025 ஆகஸ்ட்  மாதம் கொடுத்தால் அதைக் கொண்டு அன்றைய விலையில் அவர் 50 பவுன் நகை தான் வாங்க முடியும். இதைப் போலவே அவர் 2023-இல் ஒரு  மனை வாங்கி இருந்தாலும் அதன் மதிப்பு இன்று  இன்னொரு மடங்கு கூடி இருக்கும். இது எவ்வளவு பெரிய பேரிழப்பு. பணியில் உள்ளவர்களின் நிலுவைத் தொகையை உடனடியாகவும், ஓய்வு பெற்று 25 மாதங் களாகியும் வெறுங்கையோடு வேதனையில் உள்ள மூத்தவர்களின் பணத்தை தீபாவளிக்கு முன்பாக வழங்குவோம் என்று அமைச்சர் அறிவிப்பது தான் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளிக்கும். எல்லா கோரிக்கை களும் ஒரு கால வரையறையோடு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எங்களின் அழுத்தமான கோரிக்கை. இதற்கான அறிவிப்பை அமைச்சர் செய்வார்  என எதிர்பார்க்கிறோம். அந்த அறிவிப்பு வந்த பிறகு சிஐடியு போராட்டத்தை கைவிடும். இல்லையேல் போ ராட்டத்தை தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அ. சவுந்தரராசன் தெரிவித்துள்ளார்.