இறைச்சிக் கடைகளில் தடை செய்யப்பட்ட 1.50 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் தஞ்சை மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை
தஞ்சாவூர், ஆக. 24- தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதைத் தடுக்க மாநகராட்சி அலுவலர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஞாயிறு அன்று, மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் தலைமையில் துப்புரவு அலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் பழைய ராமேஸ்வரம் சாலை, நம்பர் 1 நாகை சாலை, கீழவாசல் வாடிவாசல் கடைத்தெரு, கொள்ளுப்பேட்டை தெரு, மருத்துவக்கல்லூரி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகள் மற்றும் கீழவாசல் மீன்மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மீன் கடைகள் ஆகியவற்றில், வாடிக்கையாளர்களுக்கு இறைச்சி, மீன்களை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் கொடுக்கப்படுகிறதா எனவும், பிளாஸ்டிக் பயன்படுத்துகிறார்களா என்றும் சோதனை செய்தனர். இதில் 25-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட கடைகளில் இருந்து மொத்தம் 1.50 டன் பிளாஸ்டிக் பைகளை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் மொத்தம் ரூ.25 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கடைகளில் மீண்டும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தினால் அபராதத் தொகை உயர்த்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.