புதிய ஜிஎஸ்டி வரி விகிதத்தால் தமிழகத்திற்கு ரூ.9,750 கோடி இழப்பு ஏற்படும்!
சென்னை, ஆக.30- ஒன்றிய அரசு தற்போது இருக்கும் 5, 12, 18, 28 என்ற ஜிஎஸ்டி வரி விகிதங்களை 5, 18 என்ற இரட்டை விகிதங்களாக மாற்ற உள்ளது. இது தொடர்பாக அடுத்த மாதம் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த புதிய ஜிஎஸ்டி வரி விகிதத்தால் தமிழகம் உள்பட ஒவ்வொரு மாநிலங்களுக்கும் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை இழப்பு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. இது தில்லியில் நடந்த மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2024-25 ஆம் நிதியாண்டில் தமிழகத்தின் மொத்த ஜிஎஸ்டி வசூல் 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். அதில் ஒன்றிய அரசும், மாநில அரசும் பாதி பாதி பகிர்ந்து கொள்ளும். அதன்படி தமிழகத்திற்கு 65 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும். அதில், 15 சதவீத இழப்பு என்று எடுத்துக்கொண்டால் கூட, 9,750 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு விடும். 20 சதவீதம் என்றால் 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும். ஒரு ஆண்டில் இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டால், தமிழக அரசுக்கு கடுமையான நிதிச் சுமை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
