திருவிளையாட்டம் கிராமத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்
மயிலாடுதுறை, செப். 6- மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட திருவிளையாட்டம் ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசும்போது, “ஒரு வட்டாரத்திற்கு 3 மருத்துவ முகாம்கள் வீதம் நடத்த திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஒரே இடத்தில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், இருதய மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை, தூய்மை பணியாளர்களுக்கான அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை போன்றவைகள் பெறுவதற்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இம்முகாம்கள் நடத்தப்படுகிறது. முகாம் நடைபெறுவதற்கு முன்பாகவே அப்பகுதி மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் முறையாக இம்முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார். அதனைத்தொடர்ந்து 5 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளும் 10 களப்பணியாளர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் மதிப்பிலான கையடக்க கணினிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.