மயிலாடுதுறையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்
மயிலாடுதுறை, ஆக. 23- மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பேரூராட்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமினை, மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் தொடங்கி வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினர். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இம்முகாம்கள் நடத்தப்படுகிறது. இம்முகாம்களில் ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் அனைத்து பயனாளிகளுக்கும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, முழுமையான ரத்த அணுக்களின் எண்ணிக்கை, ரத்த சர்க்கரை அளவு, சிறுநீரக செயல்பாட்டு சோதனைகள் செய்யப்படுகிறது. மேலும், ஈ.சி.ஜி, எக்கோ, எக்ஸ்ரே, ஸ்கேன், காசநோய் மற்றும் தொழுநோய் பரிசோதனைகள், பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் செய்யப்படுகிறது. உடல் ஆரோக்கியம் மிக அவசியம் என்பதை கருத்தில் கொண்டு, உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற மருத்துவ பரிசோதனை முகாம்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் உரையில் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, 10 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும், ஒருவருக்கு தூய்மை பணியாளர் அடையாள அட்டையும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மணல்மேடு பேரூராட்சி தலைவர் கண்மணி, சுகாதார பணிகள் இணை இயக்குநர் மரு.பானுமதி, துணை இயக்குநர் மரு.அஜீத் பிரபுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.