tamilnadu

img

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் பெரம்பலூர் ஆட்சியர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்  பெரம்பலூர் ஆட்சியர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பெரம்பலூர், ஆக. 31-  பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் அரசு மேல்நிலை பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை, மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி சனிக்கிழமை பார்வையிட்டார்.  தொடர்ந்து நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெறுவது குறித்து, கிராமப்புறம் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொதுமக்களும் அறிந்து பயன்பெறும் வகையில், தேவையான விளம்பர விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், முகாமிற்கு வருகை தரும் பொதுமக்கள் எவ்வகையான சிகிச்சைக்கு செல்கிறார்கள் என்பது குறித்து கேட்டறிந்து, தன்னார்வலர்கள் மூலம் தொடர்புடைய அறைக்கு அழைத்துச்சென்று வழிகாட்ட வேண்டும். பொதுமக்கள் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தனித்தனியாக சிகிச்சை மேற்கொள்வதற்கு சென்று சிரமப்பட்டு வரும் நிலையில், அனைத்து வகையான நோய்களுக்கும் ஒரே இடத்தில் முகாம் நடக்கின்றன. ஒவ்வொருவரும் அனைத்து வகையான பரிசோதனைகளும் செய்து கொண்டு அதற்கேற்ப ஆலோசனைகளை பெற்று மருந்து மாத்திரைகளை உட்கொண்டு பயனடையலாம் என தெரிவித்தார். தொடர்ந்து பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  அரியலூர் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், சனிக்கிழமை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமை, ஆட்சியர் பொ. ரத்தினசாமி பார்வையிட்டு, பொதுமக்களிடம் மருத்துவ சேவைகள் வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்தார். மேலும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.20,000 திருமண உதவித்தொகை, ஒரு பயனாளிக்கு ரூ.1,200 ஓய்வூதிய உதவித்தொகை, ஒரு பயனாளிக்கு ரூ.6,000 கல்வி உதவித்தொகை ஆகியவற்றிற்கான ஆணைகளையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் முகாமுக்கு வந்த 5 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் வழங்கி, நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இம்முகாமில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா. சிவராமன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மாரிமுத்து, துணை இயக்குநர் மணிவண்ணன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.