தளவாய் கிராமத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தொடக்கி வைப்பு
அரியலூர், ஆக.3- தமிழகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற முழு உடல் பரிசோதனை முகாமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக சனிக்கிழமை தொடக்கி வைத்தார். இதையடுத்து, அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த தளவாய் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மேற்கண்ட நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட்டு, அதன் பின்னர், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் முகாமை தொடக்கி வைத்து பார்வையிட்டார். பின்னர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் 3 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், 3 பயனாளிகளுக்கு மருந்து மாத்திரைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு இயற்கை மரண உதவித்தொகை ரூ.35,000-க்கான காசோலை ஆகியவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன், பெரம்பலூர் ம.பிரபாகரன், அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதன்மையர் முத்துகிருஷ்ணன், கோட்டாட்சியர் ஷீஜா மற்றும் அனைத்துத் துறை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.