tamilnadu

img

ராதாகிருஷ்ணன் நகரில் தேங்கி நிற்கும் மழை நீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்

ராதாகிருஷ்ணன் நகரில் தேங்கி நிற்கும்  மழை நீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்

கும்பகோணம்,  அக். 14-  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் உள்ளூர் ஊராட்சியில் அன்னை அஞ்சுகம் நகரில் அமைந்துள்ள இராதாகிருஷ்ணன் நகர் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது. இந்த நகர், உள்ளூர் ஊராட்சியில் இருந்தாலும் கும்பகோணம் மாநகரப் பகுதியை ஒட்டி உள்ளதால் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு பல காலமாக குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த நகரில் செல்வதற்கு சாலை வசதி இல்லாமல் குண்டும் குழியுமாக மழை காலத்தில் தண்ணீர் தேங்கியும் கோடை காலத்தில் மண்புழுதிகள் பறந்து குடியிருப்பு வாசிகளை மிகவும் கஷ்டத்திற்கு உள்ளாக்கி வருகிறது. தற்போது பெய்த லேசான மழையில் கூட கும்பகோணம் ராதாகிருஷ்ணன் நகரின் சாலையில் குளம் போல் மழை நீர் தேங்கி பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமலும், பள்ளி குழந்தைகள், அன்றாடம் வேலைக்கு செல்பவர்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி இருக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றத்துடன் தொற்று நோய் பரவும் அபாயமும் இருந்து வருகிறது. இது சம்பந்தமாக அப்பகுதியில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில், சாலை வசதி வேண்டி பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மேலும், கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல்வரின் முகவரி இணைய தளத்திலும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இருப்பினும் மனுக்களுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நேரிலும் முறையிட்டனர். ஆனால், அவர்கள் தற்காலிகமாக அங்கே நிற்கும் தண்ணீரை மட்டும் தனியாருக்கு சொந்தமான பிளாட்டுகலில் விட்டு, பொதுமக்களுக்கு மேலும் இடையூறு மற்றும் எப்பொழுதும் தண்ணீர் தேங்கி நிற்கும் சூழ்நிலையை உருவாக்கி வருகின்றனர். இதைக் கேட்டால் அரசு அலுவலர்கள் பொதுமக்களிடம் முன்னுக்கு பின் முரணாக பேசி மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, கும்பகோணத்தை ஒட்டிய உள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராதாகிருஷ்ணன் நகர் மண் சாலையை தார்ச் சாலையாக மாற்றி மழை தண்ணீர் தேங்காமல் பாதுகாத்து தொற்றுநோய் பரவும் அபாயத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.