கராத்தே பிரதர்ஸ் அறக்கட்டளை சார்பில் அறந்தாங்கியில் விளையாட்டுப் போட்டிகள்
அறந்தாங்கி, ஆக. 24- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் 26 ஆவது ஆண்டு தொடக்க விழாவின் ஒருபகுதியாக விளையாட்டுப் போட்டிகள், அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றன. அறக்கட்டளையின் தலைவர் வி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தொடக்கத்தில் காரைக்குடி சாலை, சோதனைச்சாவடி அருகே, ஒலிம்பிக் தீப ஓட்டத்தை, அறந்தாங்கி காவல் ஆய்வாளர் செந்தூரப்பாண்டி தொடங்கி வைத்தார். ஒலிம்பிக் தீபத்தொடர் ஓட்டம் பெரிய கடைவீதி, கட்டுமாவடி முக்கம், காமராசர் சிலை, பேருந்து நிலையம், அண்ணாசிலை வழியாக அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடலை வந்தடைந்தது. அறந்தாங்கி பொற்குடையார் அன்னதான சபை மற்றும் தமிழன் அசோசியேசனின் தலைவர் டான் கே. சத்தியமூர்த்தி பங்கேற்று, ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து, விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்து, மாணவர்களை வாழ்த்தினார். போட்டிகளில் 45-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளைச் சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பங்கேற்றனர். போட்டிகளின் முடிவில், ஆடவர் பிரிவில் அதிக வெற்றிப் புள்ளிகளைக் குவித்த அறந்தாங்கி மான்போர்ட் பள்ளிக்கு கே.பி. ஸ்போர்ட்ஸ் பாய்ஸ் சாம்பியன்ஷிப் கோப்பையும், மகளிர் பிரிவில் அதிக வெற்றிப் புள்ளிகளைக் குவித்த அரசர்குளம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கே.பி.ஸ்போர்ட்ஸ் கேர்ள்ஸ் சாம்பியன்ஷிப் கோப்பையும், புதுக்கோட்டை அரசு மாதிரி பள்ளிக்கு கே.பி.ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் சிறப்புக்கோப்பையும் வழங்கப்பட்டன. அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ம. துரை, அறந்தாங்கி அரசு பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் பொறியாளர் ச.குமார், அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் சொ. மாயக்கிருஷ்ணன், அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் த.தாமரைச்செல்வன், பள்ளித்துணை ஆய்வர் மு.இளையராஜா, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் மா.பழனியப்பன் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.