சுரங்கத்துறை உதவி இயக்குநரின் அடாவடி சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், ஆக. 7 – நாமக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் சத்தியசீலனின், அடாவடித்தானமான போக்கை கண்டித்தும், அவரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கனிமவளத்துறை உதவி இயக்குநர் சத்தியசீலன், பொதுமக்களையும் விவசாயிகளையும் ஒருமையில் பேசுகிறார். கனிமவள சட்டங்களை கேலி செய்கிறார். மேலும், அவர் இயற்கை வளங்களைச் சுரண்டுபவர்களுடன் இணைந்து செயல்பட்டு, அரசின் சட்டங்களுக்கு எதிராகச் செயல்படுவதாக குற்றம்சாட்டினர். சத்தியசீலனின் இந்த அடாவடி போக்கை கண்டித்து, எலச்சிபாளையம், கோக்கலை, எளையாம்பாளையம், பரமத்தி, சித்தம்பூண்டி, மல்லசமுத்திரம், மொஞ்சனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கே. பழனிவேல் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், வழக்கறிஞர் கெ.செ. செந்தில்குமார், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு மாநில துணைத் தலைவர் செல்லப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். உதவி இயக்குநர் சத்தியசீலன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.