8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒவருக்கு 20 ஆண்டுகள் சிறை
புதுக்கோட்டை, செப். 25- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே, 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் கல்லுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மதி(44). இவர், கடந்த 2023 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்த திருமயம் அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினர், மதியை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில், நீதிபதி கனகராஜ் வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். குற்றவாளி மதிக்கு, போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. சிறை தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு ரூ.5 லட்சம் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாபநாசம் ரயில் நிலையத்தில் தரைத் தளம் போடும் பணி
பாபநாசம், செப். 25- பாபநாசம் ரயில் நிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தரைத் தளம் போடும் பணி நடைபெற்றது. இதனை தஞ்சை ரயில்வே முதன்மை பொறியாளர்கள் சத்திய நாராயணன், இளங்கோ, உதவி கோட்டப் பொறியாளர் குலசேகரன், உதவி பொறியாளர் ஸ்ரீதர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதில், திருச்சிராப்பள்ளி தென்னக ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலருமான சரவணன் உடன் இருந்தார்.
ஆசிரியை மீது தாக்குதல்: ஒருவர் கைது
குழித்துறை, செப்.25- ஓய்வு பெற்ற ஆசிரியை தாக்கப்பட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். குமரி மாவட்டம், காப்புக்காடு பெருவிளை வீடு பகுதியைச் சேர்ந்தவர் ஏசுதாசன் மனைவி செல்ல தாய்(80). இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை. இவரது மகனின் வீட்டு பராமரிப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இல்லத்தாணி விளையைச் சேர்ந்த சேம் புரூஸ்(72) என்பவருக்கும் இவருக்கும் சொத்து சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது சேம் புரூஸ், செல்லத்தாயை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி காயப்படுத்தினார். செல்லத்தாயை அக்கம்பக்கத்தினார் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து சேம்புரூஸ்யை கைது செய்தனர்.