ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் விடிய விடிய காத்திருப்பு போராட்டம்
திருவாரூர், ஆக. 7- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம், மாவட்டக் குழு சார்பாக விடிய விடிய காத்திருப்பு போராட்டம் திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகம் முன்பாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட வளர்ச்சித்துறை செயற்பொறியாளரின் தலையீடுகளையும், இரவு 9.15 மணி வரை கூகுள் மீட் நடத்து வதை கண்டித்தும், காலியாக உள்ள 36 உதவியாளர் பணியிடங்களை நிரப்பாத ஆட்சியரின் நேர்முக உதவியாளரை கண்டித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் புதன்கிழமை மாலை துவங்கி விடிய விடிய நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.வசந்தன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜசேகர், மாவட்டச் செயலாளர் அமர்நாத், முன்னாள் மாநில துணைத் தலைவர் எஸ். புஷ்பநாதன், மாவட்டப் பொருளாளர் சிவக்குமார் மற்றும் 150-க்கும் மேற்பட்ட அலுவலர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர். மாநிலச் செயலாளர் கே.எஸ்.செந்தில் போராட்டத்தை நிறைவு செய்து உரையாற்றினார். காத்திருப்புப் போராட்டத்தில், அங்கேயே அடுப்பு அமைக்கப்பட்டு, இரவு உணவு சமைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. இரவு 3 மணி வரையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. போராட்டத்தின் எதிரொலியாக வயர்லெஸ் ஆய்வுக் கூட்டங்களையும், கூகுள் மீட் ஆய்வுக் கூட்டங்களையும் வேலை நேரம் கடந்து இரவு நடத்துவதை கைவிடுவதாக மாநில இயக்குனரிடமிருந்து, அமைப்பின் மாநில மையத்திற்கு உறுதி அளிக்கப்பட்டதால் தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.