tamilnadu

img

ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை  ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 

திருச்சிராப்பள்ளி, செப். 25- 
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க திருச்சி புறநகர் மாவட்டக்குழு சார்பில் வியாழனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
குறைந்தபட்ச ஊதிய அரசாணை 2 (டி) 62 நாள் 11.10.2017-ன் படி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பின் படி, நகராட்சி நிர்வாக இயக்குனரின் சுற்றறிக்கையின் படி ஒப்பந்த அடிப்படையில் பணி செய்யும் தூய்மைப் பணியாளர்கள், டிபிசி ஊழியர்கள், குடிநீர் பிரிவு ஊழியர், ஓட்டுநர் மற்றும் இதர பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அரசாணை 156-ன் படி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உடனடி பதவி உயர்வு வழங்க வேண்டும். கருணை அடிப்படையிலான வாரிசுப்பணிகளை வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு குடியிருப்பு வீடு வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அவுட்சோர்சிங் அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் வார விடுப்பு வழங்கிட உறுதி செய்ய வேண்டும். பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் டிபிசி ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ள தினக்கூலி ரூ 722 வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. 
ஆர்ப்பாட்டத்திற்கு லால்குடி நகராட்சி சங்கச் செயலாளர் மகாமணி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி திருச்சி புறநகர் மாவட்ட சிஐடியு செயலாளர் சம்பத், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சம்மேளன மாநிலச் செயலாளர் மணிமாறன், திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், பெல் சிஐடியு சங்க பொதுச்செயலாளர் பரமசிவம் ஆகியோர் பேசினர். முசிறி நகராட்சி சங்கச் செயலாளர் முத்து நன்றி கூறினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.