பட்டியலின மாற்றுத்திறனாளி இளைஞர் மீது தாக்குதல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க கோரி வேதாரண்யத்தில் சாலை மறியல்
நாகப்பட்டினம், ஆக. 29- நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கோடியக்கரை, அண்ணா நகரில் கந்தசாமி(25) என்ற மாற்றுத்திறனாளிக்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட மூன்று சக்கர வாகனத்தில் ஒட்ட ப்பட்டிருந்த முதல்வரின் படம் மழையால் கிழிந்துவிட்ட நிலையில், ஏன் முதல்வர் படம் ஒட்டவில்லை என்று கேட்டு முன்னாள் ஊராட்சி உறுப்பினர் கே.பி.லட்சுமணன் ஆக.26 அன்று கடுமையாக தாக்கியுள்ளார். இதனை கந்தசாமியின் தந்தை மணியன் குடும்பத்தினர் கோடி யக்கரை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.சுப்பிரமணியனியத்திடம் சென்று முறையிட்டனர். இந்த நிலையில் பட்டியலினத்தைச் சார்ந்த இவர்கள், எங்களை கேள்வி கேட்பதா என்ற கோபத்தோடு, அன்று இரவு பத்து மணியளவில் முன்னாள் ஊராட்சி உறுப்பினர் ராஜேஸ்வரி, ராஜேந்திரன் ஆகியோர் வீட்டிற்குள் புகுந்து 10-க்கும் மேற்பட்டோர் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலுக்கான ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.சுப்பிரமணியன் செய்ததாக கூறுகின்றனர். தாக்குதலுக்கு உள்ளான கந்தசாமி, ராஜேந்திரன் மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தவர்களை ஆக.27 அன்று, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாதர் சங்கம் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சென்று பார்த்து ஆறுதல் கூறினர். பின்னர், வேதாரண்யம் காவல்நிலையம் சென்று விசாரணை செய்ததற்கு, சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யவில்லை என்பது தெரியவந்தது. சம்மந்தப்பட்ட காவல்நிலைய பொறுப்பு அலுவலரிடம், கோடியக்கரை தலித் மக்கள் மீது தாக்குதல் நடந்ததற்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தும், வழக்குப் பிதிவு செய்யவில்லை. இதனால், வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாதர் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம், விவசாயிகள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை வேதாரண்யம் கடை த்தெருவில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட நிர்வாகிகள் அ.தி.அன்பழகன், ஏ.ராஜா, பி.சுபாஷ் சந்திரபோஸ், சிவகுமார், மாதர் சங்க நிர்வாகிகள் டி.லதா, எஸ்.சுவதேவி,, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.சித்தார்த்தன், இந்திய தொழிற்சங்க மைய மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேதாரண்யம் தெற்கு ஒன்றியச் செயலாளர் வி. அம்பிகாபதி, ஒன்றிய நிர்வாகிகள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின்னர், வேதாரண்யம் வட்டாட்சியர் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர், மறியல் நடைபெற்ற இடத்திற்கு வந்து, சம்மந்தப்பட்ட நபர்கள்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி வழக்குப் பதிந்து, கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.