திருவாரூர் டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம்
திருவாரூர், செப். 8- சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் அவசரகதியில் காலிபாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை அமலாக்க நினைக்கும் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து, திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் எதிரே டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஏ.முத்துவேல் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் வி.சிவபாலன் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.மாலதி, மாவட்டத் தலைவர் எம்.கே.என். அனிபா, அமைப்பின் மாவட்டச் செயலாளர் பி.என். லெனின் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். மாவட்டப் பொருளாளர் பி. பாப்பையன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே.பி. ஜோதிபாசு உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். டாஸ்மாக் கடைகளில் விற்பனையில் ரொக்கத்திற்கு பதிலாக பிஒஎஸ் மூலம் பணமில்லா பரிவர்த்தனையை அதிகரிக்க நிர்பந்தப்படுத்தக் கூடாது. தொடர்ந்து பத்தாண்டுகளாக ஒரே கடையில் பணிபுரியும் ஊழியர்களை பணியிட மாற்றம் செய்திட வேண்டும். பணி நிரந்தர தகுதி வழங்கல் சட்ட அமலாக்க அதிகாரியின் உத்தரவை உறுதி செய்துள்ள சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து டாஸ்மாக் ஊழியர்களையும் பணிவரன் முறைப்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.