பட்டா வழங்கக் கோரி காத்திருப்பு போராட்டம்
திருச்சிராப்பள்ளி, ஆக. 22- திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் சிறுகமணி கிழக்கு வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட காவல்காரபாளையம், பனைமந்தை தெருவில் 11 விவசாய தொழிலாளர் குடும்பங்கள் வீடு கட்டி நீண்ட காலமாக குடியிருந்து வருகின்றனர். இவர்கள் குடிமனை பட்டா கேட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல், தொடர்ந்து மனு கொடுத்து வந்தனர். இந்நிலையில் வருவாய்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி 9 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இது நாள் வரை பட்டா வழங்காததை கண்டித்தும், பட்டா வழங்க வலியுறுத்தியும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் தலைமையில் அப்பகுதி மக்கள் வியாழனன்று ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் தங்கதுரை தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி, மாநிலச் செயலாளர் மாரியப்பன் பேசினார். இதில், மாவட்டச் செயலாளர் ராஜேஷ்கண்ணா, ஒன்றிய தலைவர் நடராஜன், ஒன்றியச் செயலாளர் ஜோதிமுருகன், மாவட்டப் பொருளாளர் இளங்கோவன் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர், தாசில்தார் செல்வகணேசன் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் அனைத்து பட்டாக்களும் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு மாதத்திற்குள் அனைவருக்கும் பட்டா வழங்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.