பேராவூரணி பேரூராட்சியில் பன்றிகள் தொல்லை
தஞ்சாவூர், ஆக. 31- பேராவூரணி பேரூராட்சி பகுதியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் வெறிநாய்த் தொல்லையுடன், பன்றிகளின் நடமாட்டமும் அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக செங்கொல்லை பகுதி, ரயில்வே நிலையம், முடப்புளிக்காடு ஆகிய பகுதிகளில் பன்றிகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. சிலர் பன்றிகளை இறைச்சிக்காக வளர்த்து விற்பனை செய்கின்றனர். இந்த பன்றிகள் தெருவில் கட்டுப்பாடின்றி மந்தைகளாக சுற்றித் திரிகின்றன. மேலும், ஆனந்தவல்லி வாய்க்கால் பகுதி சாக்கடைகளில் படுத்து புரண்டு அத்துடன் வீடுகளுக்குள் புகுந்து, பாத்திரங்களை உருட்டுகின்றன. குடியிருப்பு பகுதிகளில் பன்றிகள் நுழைவதால் பொதுமக்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. நகரில் உள்ள திருமண மண்டபங்களில் சேகரிக்கப்படும், எச்சில் வாழையிலைக் கழிவுகள் அப்பகுதியில் உள்ள சில இடங்களில் கொட்டப்படுவதும் பன்றிகள் நடமாட்டத்திற்கு காரணமாக உள்ளது. எனவே, செங்கொல்லை உள்ளிட்ட பேராவூரணி நகர் பகுதியில், சுற்றித் திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கொல்லை பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயணிகள் ரயிலில் தண்ணீர் குழாய்களை திருடிய இளைஞர் கைது
தஞ்சாவூர், ஆக. 31- தஞ்சாவூரில், நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் ஒன்றில் தண்ணீர் குழாய்களை திருடிய இளைஞரை, காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 5 தண்ணீர் குழாய்களை மீட்டனர். ரயில் நிலையங்களில் குற்ற நிகழ்வுகளை தடுக்கவும், ரயில்வே பொருட்கள் திருடு போவதைத் தடுக்கும் வகையிலும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் கே.அருள்ஜோதி உத்தரவின் பேரில், ரயில் நிலையங்களில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதே போல், தஞ்சாவூர் ரயில் நிலையத்திலும் மூத்த பிரிவு பாதுகாப்பு ஆணையர் பிரஷாந்த் யாதவ் மேற்பார்வையில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் நான்காவது நடை மேடையில், நின்று கொண்டிருந்த ஒரு ரயில் பெட்டியில் ஏறிய இளைஞர் ஒருவர், பெட்டியில் கழிவறை மற்றும் கைகழுவும் இடத்தில் உள்ள தண்ணீர் குழாய்களை திருடியது தெரியவந்தது. அவர் ரயில் பெட்டியில் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்த செயல் கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த தஞ்சாவூர் ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு காவல்துறையினர், அந்த இளைஞரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்த போது, அவர், சேலம் மாவட்டத்தைச் சே்ரந்த விக்னேஸ்வரன்(20) என்பது தெரியவந்தது. மேலும், அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் பையை சோதனையிட்டபோது, அதில் 5 எண்ணிக்கையிலான தண்ணீர் குழாய்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தீ விபத்தில் சேதமடைந்த கடை உரிமையாளர்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்
தஞ்சாவூர், ஆக. 31- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே, சேதுபாவாசத்திரம் கடைவீதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த கடைகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கி பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார் ஆறுதல் கூறினார். சேதுபாவாசத்திரம் கடைவீதியில், கிழக்கு கடற்கரை சாலையில், சிவாஜி என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தில், சே. இப்ராம்ஷா என்பவர் மளிகைக்கடையும், பெ.ராமு என்பவர் மீன் பிடித்தொழிலுக்குத் தேவையான வலை, தளவாடப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையும் நடத்தி வந்தனர். அருகிலேயே கோழி இறைச்சிக்கடை ஒன்றும் செயல்பட்டு வந்தது. கடந்த புதன்கிழமை இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மளிகைக் கடையும், மீன்பிடி தளவாடப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையும் முற்றிலும் தீயில் எரிந்து சேதமானது. பட்டுக்கோட்டை, பேராவூரணி, கீரமங்கலம் பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இந்த தீவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்களும், கட்டடமும் முற்றிலும் சேதமடைந்தது. இந்நிலையில், வெளியூர் சென்றிருந்த சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடைகளை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு, கட்டடம் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு ஆறுதல் கூறியதோடு நிதியுதவி வழங்கினார். அப்போது, முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் சாகுல் ஹமீது உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
போலி மருத்துவர் கைது
அரியலூர், ஆக. 31- தஞ்சாவூர், கீழவீதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(58). இவர், தகுந்த மருத்துவக் கல்வி சான்றிதழ் இல்லாமல், அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரை அடுத்த கள்ளூர் பாலம் அருகே, ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, தகவலறிந்த மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர், கீழப்பழுவூர் காவல் துறையினர், சம்பவ இடத்துக்குச் சென்று, விசாரணை மற்றும் அவரது வீட்டை சோதனை செய்ததில், பன்னீர்செல்வம் 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருப்பதும், வீட்டில் மருத்துவ சிகிச்சைக்கான பொருட்கள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.